Friday 30 September 2011

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள்: விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
அவர் பேசியதாவது: சேலம் மாநாட்டில் கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்டுத்தான் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி அமைத்தேன்.
இப்போதும் மக்ளோடுதான் கூட்டணி அமைத்து உள்ளேன். இப்போது தே.மு.தி.க.வை நம்பி 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் வந்து உள்ளன.
சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிறது. மக்களிடம் வீட்டு வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூல் செய்கின்றனர். ஆனால் இன்னும் சாலை, குடிநீர், பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. அதை பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் கவலைப்படவில்லை.
மக்களுக்காக போராடும் பிரதிநிதிகளை தேர்ந்து எடுப்பது மக்களின் கடமையாகும். தமிழகத்தில் 67 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஜாதிக்கட்சிகள் இன்று திராவிடக் கட்சிகளோடு இணைந்து பணம் சம்பாதித்து விட்டு தேசிய கட்சிகளும் தேவை இல்லை என்று கூறுகின்றன.
அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கூறும் ஒரு ஜாதிக்கட்சி தலைவர் அவரது கட்சியில் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்து உள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை. நான் கட்சி தொடங்கியபோது 71வது கட்சியாக இருக்கும் என்று கூறினார்கள். தற்போது 7வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் தே.மு.தி.க 1வது கட்சியாகி விட்டது.
எனவே உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதன் பின்னர் அரியலூரில் விஜயகாந்த் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றால் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். இதில் சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டால் அதை நான் பார்த்து கொள்கிறேன்.
படித்த இளைஞர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 67 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத இடத்தில்தான் புரட்சி உருவாகும்.
தே.மு.தி.க வெற்றி பெற்றால் படித்த படிக்காத ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். மக்கள் மாறி மாறி குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களித்தது போதும். மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள்.