Wednesday 14 September 2011

வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்


வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் மின்சாரத்தின் பயன் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மின்சாரத்தின் உபயோகம் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது.

ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் கிரைண்டர் மிக்சிகள் ஆனது போல் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கனரக எந்திரங்கள் மூலம் இயங்கும் தொழிற்சாலைகள் வரை மின்சாரத்தை நம்பித்தான் உள்ளன.

அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களும் மின்சாரத்தை நம்பியே இருக்கும் நிலையில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி இருக்கிறது.
மின்சார தட்டுப்பாட்டில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு நாடும் பல்வேறு மாற்று திட்டங்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு ஆர்வம் காட்டி வருகின்றன.

அணு மின்சக்தி, தண்ணீர், கடல் அலை, காற்று மற்றும் எரிவாயு போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை பயன்படுத்தி மின்சார தட்டுப்பாட்டை போக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். அழுகும் நிலையில் இருக்கும் வாழைப்பழம் மற்றும் விற்பனைக்கு லாயக்கு இல்லை என்று கழிக்கப்படும் சிறிய வாழைப்பழங்கள் போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் பில் கிளார்க் மற்றும் அவரது குழுவினர் இணைந்து வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டின் வாழைப்பழ உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அணுகி எங்களிடம் ஆண்டுதோறும் ஏராளமான அளவு வாழைப்பழங்கள் அழுகிப் போகின்றன.

மேலும் விற்பனைக்கு பயன்படாத நிலையில் உள்ள வாழைப்பழங்களும் வீணாக தெருக்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் வீசப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி ஏதாவது நல்லது செய்ய முடிந்தால் பாருங்கள்என்று கூறினார்கள்.

இதை மனதில் கொண்டு பில் கிளார்க் மற்றும் அவரது குழுவினர் வீணாகப் போகும் வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கினார்கள்.
அப்போதுதான் வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தனர். இதற்காக ஆய்வுக்கூடத்தில் பெரிய தொட்டி ஒன்றை அமைத்தனர். இதில் வாழைப் பழங்களை போட்டு காற்று புகுந்து விடாதபடி சீல்வைத்து மூடினார்கள்.

வாழைப்பழம் விரைந்து அழுக வேண்டும் என்பதற்காக சில வேதிப் பொருட்களும் அதனுடன் கலந்தனர். இதன் காரணமாக வாழைப்பழம் அழுகி அதில் இருந்து மீத்தேன் வாயு அதிக அளவில் வெளிப்பட ஆரம்பித்தது.

இந்த மீத்தேன் வாயு மூலம் ஜெனரேட்டர் ஒன்றை இயக்கி அதன்மூலம் மின்சாரம் தயாரித்து காட்டினார்கள்.இந்த கண்டுபிடிப்பு குறித்து பில் கிளார்க் கூறும்போதுஆய்வுக்கூடத்தில் எங்கள் பரிசோதனைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து பெரிய அளவில் தொழிற்சாலைகள் நிறுவி அதன்மூலம் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்.

இந்தப்பணி சாதாரணமாக இருக்காது. இது சவால் நிறைந்த பணியாகும். காரணம் மற்ற மின்சாரம் தயாரிக்கும் முறையில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகும்.
வியாபாரிகளின் கணக்குப்படி ஆண்டு தோறும் சுமார் 20 ஆயிரம் டன்கள் எடை அளவு வாழைப் பழங்கள் குப்பைக்கு வருகிறது. இவை அனைத்தையும் சேகரித்து தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும்.

பின்னர் இவற்றை தரம் பிரித்து சுத்தம் செய்து பெரிய தொட்டிக்குள் போட வேண்டும். அதோடு அவை விரைவில் மக்கிப்போய் அழுக வேண்டும் என்பதற்காக உரிய வேதிப் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.

இந்தக் கலவை ஒருசில நாட்கள் அப்படியே இருக்கவேண்டும். அதன்பிறகு அதில் இருந்து மீத்தேன் வாயு வெளிப்படும். இந்த மீத்தேன் வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டர்களை இயக்கி அதன் மூலம் வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை இயக்கலாம்.

தற்போதைய கணக்குப்படி 60 கிலோ வாழைப்பழத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் ஒரு மின் விசிறியை 30 மணி நேரம் தொடர்ந்து ஓட வைக்க முடியும்.

இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் விரிவடையும்போது அதிக அளவு மின்சாரம் தயாரிக்க முடியும்என்று கூறி இருக்கிறார் ஆராய்ச்சியாளர் பில் கிளார்க்.