Friday 30 September 2011

மனிதர்களை அடிமையாக்கிய உப்பு:

 
எப்படி புகையிலையும், சிலவகை போதை மருந்துகளும் மனித மூளையின் செல்களை தூண்டிவிட்டு தற்காலிகமாக துடிப்புடன் செயல்பட வைக்கின்றனவோ, அதையேதான் உப்பும் செய்கிறதாம்.
இப்படித்தான் கூறுகிறார்கள் இது குறித்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள். என்ன? இந்த செய்தியே ஒரு சிட்டிகை உப்பு சாப்பிட்டதைப் போல் இருக்கிறதா?
உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயக் கோளாறுகளுக்கு இலக்காகலாம். எனவே உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்ற டாக்டர்களின் அறிவுரைக்கும் செவி சாய்க்காது.
உப்பின் மீதுள்ள காதலைக் குறைக்காமல் இருப்பவர்கள் ஏராளம். மீன், எண்ணையில் பொரிக்கப்படுகிற நொறுக்குத்தீனி இவையெல்லாம் உப்பில்லாமல் போனால் எப்படி இருக்கும்? யாருமே விரும்பமாட்டார்கள்.
உப்பு தொடர்பான இருவேறு விதமான ஆராய்ச்சிகளை அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு மேற்கொண்டது. முதலில் சில எலிகளுக்கு குறைவாகவும், சிலவற்றுக்கு அதிகமாகவும் உப்புச் செலுத்தப்பட்டு அவற்றின் மூளை செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.
மற்றொரு முறையில் சில எலிகளுக்கு சில நாட்கள் வரை உப்பு எதுவும் தராமல் விட்டுவிட்டு பின்னர் உப்பைக் கொடுத்து அவற்றின் மூளைச் செயல்பாடுகளைக் கவனித்தனர்.
ஹெராயின், கோகெய்ன் மற்றும் நிகோடின் போன்றவற்றுக்கு அடிமையானவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தன, உப்புக்காக ஏங்கிப்போன எலிகளின் செயல்பாடுகள். உப்பின் அளவு குறையும் நிலையில் மூளையில் நியூரான்களின் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த நியூரான் சேர்க்கைதான் உப்பு உடனடியாக தேவை என்ற உணர்வை அல்லது ஒருவித வேட்கையை ஏற்படுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
உப்பு கொடுக்கப்பட்டு அது ரத்தத்துடன் கலப்பதற்கு முன்பே எலிகளிடம் முன்பிருந்த அசாதாரண நிலை முற்றிலுமாக மாறிப்போனது என்ற சுவாரசியமான உண்மையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் உப்பின் அளவைக் குறைத்தபோது எலிகளுக்கு உணவின் மீதே நாட்டம் குறைந்து போனது. உப்பின் சுவை குறித்த தகவல்களும், அது தேவை என்கின்ற எண்ணமும் மூளையில் ஆழப் பதிவாகியிருப்பதனாலேயே நாம் உப்புப் பண்டங்களை விரும்பிச் சாப்பிடுகிறோம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.