Monday 26 September 2011

அரசியல் சதுரங்கம் ; தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கூட்டணி

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று விஜயகாந்த்தை சந்தித்து பேசினார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் இடபங்கீடு தொடர்பாக அதிமுக தேர்தல் குழுவுடன் மார்க்சிஸ்ட் பேச்சுவார்த்தை நடத்தியது. 
ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், மார்க்சிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது. மதுரை, திருப்பூர், வேலூர், கோவை ஆகிய மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் 17 நகராட்சி தலைவர், 48 பேரூராட்சி தலைவர், 33 மாவட்ட பஞ்சாயத்து வார்டுக்கும் மற்றும் சென்னை, தூத்துக்குடி, சேலம், வேலூர், மதுரை, நெல்லை மாநகராட்சி வார்டு வேட்பாளர்கள் பட்டியலையும் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.
இதற்கிடையில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியிலும் மார்க்சிஸ்ட் ஈடுபட்டுள்ளது. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தை சந்தித்து பேசினர். சுமார் 1 மணி நேரம் இச்சந்திப்பு நடந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி யிடுவது பற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது, “தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினோம். இன்றும் அவரை சந்தித்து பேச உள்ளோம். அதன் பின்னர் முக்கிய முடிவு குறித்து அறிவிக்கப்படும்’’ என்றார்.