Tuesday 27 September 2011

ஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிகள்


கூகுள் குழுமத்திலிருந்து வெளிவரும் ஜிமெயில் புத்தம் புதிய வசதிகளை கொண்டிருக்கிறது.
இவற்றை எந்தக் கட்டணமும் இன்றி நாம் பெற முடியும். மெயில் செட்டிங்ஸ் பிரிவில் லேப்ஸ் தளத்தில் இவற்றை இயக்க செட் செய்திட முடியும். இதன் மூலம் நம் ஜிமெயில் பயன்பாட்டினை நம் விருப்பப்படி அமைக்க முடியும். அத்தகைய சில வசதிகளை இங்கு காணலாம்.
1. ஆயத்த பதில்கள்(Canned Responses): இதனைப் படிக்கையில் ஏதோ நாம் விடுமுறையில் ஊருக்குச் செல்கையில் அல்லது மின்னஞ்சல் பார்க்க இயலாத நாட்களில் நமக்கு வரும் அஞ்சல்களுக்கான பதில்களைத் தானாக அனுப்பும் வசதி போல் தெரியும்.
இது அதுமட்டுமல்ல வழக்கமாக நாம் அனுப்ப வேண்டிய பதில்களை அல்லது வாடிக்கையாளர்களுக்கான செய்திகளை ஆயத்தமாகத் தேவைப்படும்போது அனுப்ப தயாரித்து வைக்கலாம்.
2. நிகழ்வுகள் நாட்காட்டி(Google Calendar Widget): இது ஒரு டெம்ப்ளேட் இணைப்பது போல. நமக்கு நாமே எழுதி வைக்கும் நினைவூட்டல் கட்டம். இதில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை எழுதி அமைக்கலாம். இதனை கூகுள் காலண்டர் வசதி என்றும் அழைக்கலாம். இது ஜிமெயில் தளத்தின் இடதுபக்கத்தில் ஒரு கட்டமாக அமைக்கப்படும்.
3. கூகுள் முன் நினைவூட்டி(Google Docs Widget): உங்கள் நண்பர்கள் அல்லது தலைமை நிர்வாகியிடமிருந்து உங்கள் கவனத்திற்கு கூகுள் டாக்ஸ் அனுப்பப்பட்டால் உங்கள் ஜிமெயில் தளத்தில் அதன் முன் தோற்றக் காட்சி ஒன்று காட்டப்படும். இதனால் நீங்கள் நேரங்கடந்து இதனைக் காணும் சூழ்நிலை தவிர்க்கப்படும்.
4. அஞ்சலில் இடம் காட்டும் மேப்(Google Maps preview): உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள முகவரிகளுக்கான ஊர்கள் சார்ந்த சிறிய மேப் ஒன்று காட்டப்படும்.
5. படங்களை இணைக்க(Inserting Images): அஞ்சல் செய்தியிலேயே புகைப்படங்கள் மற்றும் படங்களை இடைச் செருகலாக அமைப்பது. இதன் மூலம் அந்த படங்களுக்கான குறிப்புகளையும் நாம் இணைக்கலாம். மற்றபடி நாம் படங்களை இணைப்பாகத்தான் அமைக்க முடியும்.
6. படித்ததாகக் குறித்துக் கொள்(Mark as Read message): நமக்கு வரும் அஞ்சல் செய்திகள் அனைத்தையும் படித்துக் கொண்டிருக்க முடியாது. சிலவற்றைத் திறந்து படிக்கும் எண்ணமும் நமக்கு இருக்காது. திறக்காத அஞ்சல்கள் படிக்காதவையாகத் தோற்றமளிக்கும். எனவே இவற்றைப் படிக்காமலேயே, படித்ததாகக் குறித்துக் கொள்ளும் வசதியை இது தருகிறது.
7. அஞ்சல் முன் தோற்றம்(Message Sneak Peek): இந்த வசதி குறித்தும் சென்ற வாரம் எழுதப்பட்டது. மின்னஞ்சல் செய்தியினைத் திறக்காமலேயே அதில் உள்ளதைக் காட்டும் வசதி இது. இதிலிருந்து என்ன செய்தி உள்ளது என்பதனை நாம் அதனைத் திறக்காமலேயே உணர முடியும்.
8. மவுஸ் வழி உலா(Mouse Gestures): மவுஸைப் பிடித்தவாறே அதனை அசைத்து மின்னஞ்சல் பட்டியலில் செல்லும் வசதி இது. ரைட் கிளிக் செய்தவாறே இடது பக்கம் மவுஸை நகர்த்தினால் முந்தைய மின்னஞ்சலுக்குச் செல்வீர்கள்.
வலது பக்கம் நகர்த்தினால் அடுத்த அஞ்சலுக்குச் செல்லலாம். மேலே நகர்த்தினால் இன்பாக்ஸ் செல்லலாம். இப்படியே பல நகர்த்தல்களை மேற்கொள்ளலாம்.
9. அனுப்பியவரின் நேரங்காட்டி(Sender’s Time Zone): மின்னஞ்சல் மூலம் நாம் பன்னாட்டளவில் உள்ள நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. அஞ்சலைப் பார்த்தவுடன் அவருடன் பேசலாம் என்று தோன்றுகிறதா? அந்த நேரத்தில் அவர் நாட்டில் அவர் ஊரில் என்ன நேரம்? தூங்கும் நேரமா? என்ற கேள்விகளுக்கு இந்த வசதி பதிலளிக்கிறது.
10. அனுப்பியதை நிறுத்து(Undo Send): அஞ்சல் ஒன்றை அனுப்பியவுடன் அடடா, அனுப்பியிருக்கக் கூடாதே என்று எண்ணுகிறீர்களா? சில நொடிகள் எனில் அது அனுப்பப்படுவதை நிறுத்த, இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.