Saturday 15 October 2011

காங்கிரஸ்காரர்கள் பெரும் முதலாளி


காங்கிரஸ்காரர்கள் மட்டுமே பெரும் முதலாளிகளுக்காக முதுகை வளைந்து கொடுத்து நாய் போல் வாலாட்டி அவர்கள் போடும் எச்சில் பணத்திற்காக நாட்டையே விற்கிறார்கள் என்பதெல்லாம் ச்சும்மா பம்மாத்துதான்.. காங்கிரஸ் என்றில்லை.. பா.ஜ.க.வும் அதைத்தான் செய்திருக்கிறது.

இதோ குருமூர்த்தியே சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

[[1994-
ல் மெட்ரோ நகரங்களில் மட்டும் செல்லுலர் லைசென்ஸ்கள் கொடுக்கப்பட்டன. 1995-ல் ஏல முறைக்குவிட்டு, அதிக விலை நிர்ணயிக்கப்பட்டு, அதன் மூலம் பலர் லைசென்ஸ் பெற்றனர். அந்த நிறுவனங்கள் நஷ்டமடைய ஆரம்பித்தன.

1999-
ல் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது கிட்டத்தட்ட 3700 கோடி ரூபாயை அந்த நிறுவனங்களால் அரசுக்குச் செலுத்த முடியாத நிலை இருந்தது. அந்நிறுவனங்களுக்குக் கொடுத்தக் கடனை வங்கிகளாலும் திரும்பப் பெற முடியவில்லை.]]

செல்போன் லைசென்ஸை பெற்ற நிறுவனங்கள், 1600 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்த கம்பெனிகள் தங்களது இந்தத் தொழில் முதலீட்டுக்காக வங்கிகளில்தான் கடன் வாங்கியிருக்கிறார்கள். இந்த அளவுக்கா இவர்கள் பிச்சைக்காரர்களாக இருந்திருக்கிறார்கள்..? ஆச்சரியம்தான்.

நிச்சயமாக மொத்தத் தொகையில் கால்வாசியை கடனாகப் பெற்றிருப்பார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது 400 கோடி ரூபாய். இந்தக் கடன் தொகையைக் கட்ட இவர்களால் முடியவில்லை. காரணம் அந்த அளவுக்கு சம்பாத்தியம் அப்போது கிடைக்கவில்லை. செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அப்போது குறைவாகத்தான் இருந்தது. பயன்படுத்தும் கட்டணத்தை அதிகப்படுத்தியும் வசூல் செய்ய முடியவில்லை என்று நிறுவனங்கள் சொல்லியிருக்கலாம்.

சரி.. முதலில் இந்த அளவுக்கான கடன் எப்படி இவர்களுக்குக் கிடைத்திருக்கும்..? இதே அளவுக்கான தொகைக்கு யாராவது ஒருவர் ஷ்யூரிட்டி கொடுத்திருக்க வேண்டும். அல்லது அந்தப் பணத்துக்கு ஈடான சொத்துக்களை அடமானம் வைத்திருக்கலாம். இவர்கள் கடனை அடைக்கவில்லையெனில் அந்தச் சொத்துக்களை பறிமுதல் செய்து கடனுக்கு ஈடு செய்திருக்க வேண்டும். செய்தார்களா இல்லையா என்றே தெரியவில்லை.. ஆனால் அப்படியெல்லாம் வங்கிகள் செய்திருக்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். அப்படியொரு ஜனநாயக ரீதியான நடவடிக்கையை வங்கிகள் எடுக்காது என்பது உறுதியாகத் தெரிந்ததால்தானே அம்பானிகளே வங்கியில் நிதியுதவி பெற்று புதிய தொழிலை ஆரம்பிக்கிறார்கள்..!

இப்போது இந்தச் சம்பவத்தில் இதற்குப் பின்பு நடந்ததென்ன? குருமூர்த்தி சொல்வதைப் பாருங்கள்..!

[[[
அதனால் அந்தச் சமயத்தில் ஏலத்தின் மூலம் இவ்வளவு பணத்தை நிர்ணயித்து, அதனை அரசாங்கத்தால் பெற முடியாத சூழ்நிலை இருந்ததால், வருவாய் அடிப்படையில் என்ற முறையை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. அதாவது செல்லுலர் கம்பெனிகள் எவ்வளவு சம்பாதிக்கின்றனவோ, அந்த வருவாயில் எட்டு சதவிகத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயித்தது. மேலும், அந்தக் கம்பெனிகள் கொடுக்க வேண்டியிருந்த மீதித் தொகையை நுழைவுக் கட்டணமாக அரசு மாற்றியது. அப்படி முடிவெடுத்தன் மூலமாகத்தான் செல்போன் சேவையில் ஒரு வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது.]]]

எப்பேர்ப்பட்ட முறைகேட்டை எவ்வளவு எளிதாக குருமூர்த்தி தாண்டிச் செல்கிறார் என்பதையும் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்..!

அந்தக் கம்பெனிகளிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய பணமான 3700 கோடி ரூபாயை அப்படியே நுழைவுக் கட்டணமாக மாற்றி அவர்களுக்கு ஒரு ரசீது போட்டுக் கொடுத்து(இது என்னுடைய அனுமானம்) பிரச்சினையை முடித்திருக்கிறது அப்போதைய பா.ஜ.க. அரசு.

பொதுவாக எந்த ஒரு தொழிலிலும் நுழைவுக் கட்டணம் என்பது முதலில் உள்ளே நுழையும்போதே பெறப்பட வேண்டியது. ஆனால் இங்கே நடந்திருப்பதோ அப்படியே உல்டா. தொழில் நடத்த அனுமதி கொடுத்து.. அவர்களைத் தொழில் செய்ய வைத்து.. லாபம் பெற வைத்து.. குறைந்த லாபம் என்பதால் எதிர்பார்த்த பங்குத் தொகை வரவில்லை என்பதால் வர வேண்டிய பங்குத் தொகையை உள்ளே வரும்போது கொடுத்திருக்க வேண்டிய நுழைவுக் கட்டணமாக நாங்கள் நினைத்துக் கொள்கிறோம். நீங்கள் அந்தப் பணத்தைத் தர வேண்டாம்என்று கூசாமல் சொல்லி தப்பிக்க வைத்திருக்கிறார்கள் பா.ஜ.க. ஆட்சியாளர்கள். இதுவும் ஒரு வகையில் ஊழல்தானே..!

3700
கோடி ரூபாய் கட்டவில்லையெனில் அவர்களுடைய நிறுவனத்திற்கெதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாமே..? அவர்களுடைய சொத்துக்களை முடக்கியிருக்கலாமே..? கோர்ட்டில் அவர்களுக்கெதிராக திவால் நோட்டீஸை அரசே கொடுத்திருக்கலாமே..? செய்யவில்லை. காரணம்.. பிஸினஸ் லாபியைத் தவிர வேறென்ன இருக்க முடியும்..!?

ஸோ, காங்கிரஸ் அரசை குற்றம் சொல்லும் அதே சமயத்தில் இந்த 3700 கோடி ரூபாயை வசூல் செய்யாமல்விட்ட காரணத்தினால் நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்கு பா.ஜ.க. அரசே பொறுப்பேற்க வேண்டும்..! ஆ.ராசா எந்த அளவுக்குக் குற்றவாளியோ, காங்கிரஸ் அரசு என்ன மாதிரி குற்றம் செய்திருக்கிறதோ அதே குற்றத்தை அன்றைய பா.ஜ.க. அரசும் செய்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை..!

அதே சமயம்.. இன்னொன்றையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.. வங்கிகளில் வாங்கிய கடன்களைக்கூட கட்ட முடியாமல் இருந்த அந்த நிறுவனங்கள் அவற்றைக் கட்டியிருப்பார்களா..? இல்லையா..? என்பதை நாம் யோசித்துப் பார்ப்பதே முட்டாள்தனமாக இருக்கிறது. நிச்சயம் கட்டியிருக்க மாட்டார்கள் என்பதை நினைத்தே நாம் பேச வேண்டியிருக்கிறது. ஸோ.. மக்களுடைய அந்தப் பணமும் வாராக் கடனில் மூழ்கிப் போயிருக்கும்.. இந்த முறைகேட்டுக்கு யார் பொறுப்பேற்பது..? அன்றைய பா.ஜ.க. அரசைத்தானே குற்றம் சொல்ல வேண்டும்..!

இன்னொரு ஊழலையும் குருமூர்த்தி இங்கேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.

[[[2003-
ல் ஒரு தவறு ஏற்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பிக்ஸட் போன் லைசென்ஸ்தான் கிடைத்தது. அப்போது செல்லுலர் லைசென்ஸுக்கு அவர்கள் போகவில்லை. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் ஓயர் இல்லாத போனை வீட்டுக்குள் பயன்படுத்துவதுபோல வெளியிலும் பயன்படுத்துகிறவகையிலான போன்களை விற்க ஆரம்பித்தார்கள். செல்லுலர் லைசென்ஸ் இல்லாமலேயே இப்படி செய்தார்கள். சட்டப்படி அரசால் இதனை நிறுத்த முடியவில்லை. கோர்ட்டாலும் நிறுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட 50 லட்சம் சந்தாதாரர்களை அந்த நிறுவனம் அதற்குள் சேர்த்துவிட்டது.

அவர்களையும் இந்த செல்லுலர் லைசென்ஸ் முறையின்கீழ் கொண்டு வருவதற்காக 2003-ல் அருண்ஷோரி - நாணயமான அமைச்சர் - அவருடைய நாணயத்தைப் பற்றி யாரும் குறை சொல்ல முடியாது. அவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு. அதனை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே அவர் செய்தது தவறு என்று எழுதியிருக்கிறேன். ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 10000 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் 1500 கோடி ரூபாயைத்தான் அபராதமாக அவர் விதித்தார். அதில்தான் நான் தவறு காண்கிறேன்.]]]

முதலில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்த தவறு என்னவென்று பாருங்கள். லைசென்ஸ் பெற்றது வீட்டு டெலிபோன்களை விற்பதற்கு.. ஆனால் அவர்கள் விற்றது 2 கிலோ மீட்டர்களுக்குள் பேசக் கூடிய அளவுக்கான வாக்கிடாக்கி போன்களை..! இது ஏமாற்றுத்தனமில்லையா..? பொறுக்கித்தனமில்லையா..?

நமக்குச் சொந்தமான இடத்தில் 5 அடி தூரம் உள்ளே வந்து பக்கத்து வீட்டுக்காரன் தோண்டினாலே நமக்கு எப்படியிருக்கும்? ஆனால் ரிலையன்ஸ் என்னும் பகாசூரன் எவ்வளவு சாதாரணமாக 50 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்க்கும் அளவுக்கு இந்த வகை டெலிபோன்களை விற்றிருக்கிறார்கள் என்றால் எந்த லட்சணத்தில் அப்போதைய பா.ஜ.க. ஆட்சி நடந்திருக்கிறது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

இது கிரிமினல் குற்றமில்லையா..? ரிலையன்ஸுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்..? இதுவரையில் நீங்கள் லைசென்ஸ் இல்லாமல் சம்பாதித்தது போதும்.. இப்போது நாங்கள் உங்களுக்கு செல்லுலர் லைசென்ஸ் தருகிறோம். அதனை வைத்துக் கொண்டு அந்த 50 லட்சம் சந்தாதாரர்களை சேர்த்து புதிய நிறுவனத்தைத் துவக்குங்கள். இதற்குக் கண் துடைப்பாக 1500 கோடி ரூபாயை மட்டும் கட்டிவிட்டு போங்க என்று தட்டிக் கொடுத்து அனுப்பியிருக்கிறது பா.ஜ.க. அரசு.

நிச்சயமாக ரிலையன்ஸ் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியான 10000 கோடி ரூபாயை வசூலித்திருக்க வேண்டிய இடத்தில் வெறும் 1500 கோடி ரூபாயை மட்டுமே கொடுத்தால்போதும் என்று ஏதோ தனது மாமனார் வீட்டுச் சொத்தை கிரயம் செய்து கொடுப்பதுபோல தர்மம் அளித்திருப்பதை லேசுபாசாக கண்டித்துவிட்டு அதே அருண்ஷோரியை நாணயமானவர், நல்லவர் என்றெல்லாம் சொல்லும் இந்த குருமூர்த்தியை என்னவென்று சொல்வது..?

ஆ.ராசா மீதான முதல் குற்றச்சாட்டே ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வரக் கூடிய அளவுக்கான வியாபாரத்தை சில ஆயிரம் கோடிகளில் முடக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திவிட்டார் என்பதுதான். அதே இழப்பைத்தானே அருண்ஷோரியும் இங்கே செய்திருக்கிறார்..! பின்பு எப்படி அருண்ஷோரி மட்டும் நியாயமானவராக, நாணயமானவராக குருமூர்த்தியின் கண்களுக்குத் தெரிகிறார் என்று தெரியவில்லை.

ஆ.ராசா மீது எந்த வகையான குற்றச்சாட்டைச் சுமத்தினார்களோ அதே அளவுக்கான குற்றச்சாட்டை இப்போது அருண்ஷோரியும் சுமந்தாக வேண்டும் என்பதை குருமூர்த்தியின் இந்த வாதமே உணர்த்துகிறது. மேலும் அன்றைய காலக்கட்டத்தில் செல்லுலர் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் அளித்த தொகை 1600 கோடி. அதிலும்கூட 100 கோடியை ரிலையன்ஸுக்கு விட்டுக் கொடுத்து அவர்களை வாழ வைத்திருக்கிறார் அருண்ஷோரி..!

[[[
மற்றபடி அந்த அரசாங்கம் செய்த எந்த முடிவும் தவறானதல்ல. மேலும், பா.ஜ.க. ஆட்சியின்போது மந்திரிசபை கூட்டத்தின் மூலம்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன. எந்தத் தனி மந்திரியும் எந்த முடிவும் எடுக்கவில்லை. யாரையும் விரல் நீட்டி இன்னார் தப்பு செய்தார் என்று கூற முடியாது. இன்னார் லஞ்சம் வாங்கினார் என்று கூற முடியாது. இதனை என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். அப்போது எடுக்கப்பட்ட ஒரு முடிவில் கருத்து வேறுபாடு எனக்கு இருந்தாலும், அதில் லஞ்சம் இருந்தது என்றோ, முறைகேடுகள் நடந்தது என்றோ சொல்வதற்கு இடமில்லை.]]]

இப்படி எதனை வைத்து முடிவெடுக்கிறார் குருமூர்த்தி..? புரியவில்லை.. ஆ.ராசாவும் மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படிதான் நான் செயல்பட்டேன் என்று ஒரே வார்த்தையில் சொல்லித்தான் இத்தனை நாட்களாக டிராமா போட்டு வந்தார்.

இப்போது அதே தவறுகளையும், ஊழலையும் செய்திருக்கும் அருண்ஷோரிக்கு வக்காலத்து வாங்கும் குருமூர்த்தி மிகச் சுலபமாக தனது ஆதரவை அருண்ஷோரிக்கு வாரி வழங்குகிறார். அவர் நல்லவர். நாணயமானவர். பா.ஜ.க. ஆட்சியில் இதற்காக எந்த லஞ்சமும் யாருக்கும் வழங்கப்படவில்லை என்று சர்டிபிகேட்டும் வழங்குகிறார்.. முறைகேடுகள் என்று சொல்வதற்கே இடமில்லை என்று அக்மார்க் முத்திரை குத்துகிறார்..! பா.ஜ.க. மீது அவருக்கிருக்கும் பாசத்தின் காரணமாக அக்கட்சிக்கு இத்தனை நற்சான்றிதழ்களை வாரி வழங்கியிருக்கிறார் குருமூர்த்தி..!

தான் சார்ந்த, தான் விசுவாசமாக இருக்கும் நபர்கள் குற்றம் செய்தால், லேசாக ஏதோ கண்டிப்பதுபோல் கண்டித்துவிட்டு அவர்களைக் காப்பாற்றிவிடலாம் என்கிற குயுக்திதான் பத்திரிகையாளர் வேடத்தில் இருக்கும் இந்த ஆடிட்டர் குருமூர்த்தியின் வாதத்தில் இருந்து தெரிகிறது..!

அரசியல் உலகில் இங்கே யாரும் யோக்கியமில்லை என்பதை இதிலிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம்..!

நன்றி : துக்ளக்