Sunday 16 October 2011

" தலையிடா கொள்கையும் தார்மீகக் கடமையும் "

ஒரு நாடோ, இனமோ அல்லது ஒரு வர்க்கமோ இன்னொரு நாட்டின் மீதோ இனத்தின் மீதோ அல்லது வரக்கத்தின் மீதோ அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்து உரிமைப் பறிப்புக்களை மேற்கொள்ளும் போது தவிர்க்க முடியாதபடி முரண்பாடுகள் உருவாகின்றன. இந்த முரண்பாடுகளின் வளர்ச்சிகள் மோதல் களாக வடிவெடுக்கின்றன. இந்த மோதல்கள் நிலவும் அடக்குமுறையின் பரிணாமத்துக்கு ஏற்ப அரசியல் ரீதியானதாகவோ ஆயுத வடிவிலான தாகவோ அமைகின்றன. பெரும் அழிவு களை விதைக்கும் போர்கள் கூட இவ்வாறுதான் கருக்கட்டுகின்றன.
ஒரு நாடோ, இனமோ அல்லது ஒரு வர்க்கமோ இன்னொரு நாட்டின் மீதோ இனத்தின் மீதோ அல்லது வரக்கத்தின் மீதோ அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்து உரிமைப் பறிப்புக்களை மேற் கொள்ளும் போது தவிர்க்க முடியாதபடி முரண்பாடுகள் உருவாகின்றன. இந்த முரண்பாடுகளின் வளர்ச்சிகள் மோதல் களாக வடிவெடுக்கின்றன. இந்த மோதல்கள் நிலவும் அடக்குமுறையின் பரிணாமத்துக்கு ஏற்ப அரசியல் ரீதி யானதாகவோ ஆயுத வடிவிலான தாகவோ அமைகின்றன. பெரும் அழிவு களை விதைக்கும் போர்கள் கூட இவ் வாறுதான் கருக்கட்டுகின்றன.


ஓர் அடக்குமுறை நிலவும் சூழ் நிலையில் அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே மோதல்கள் தொடரும் ஒரு சூழ்நிலையில் எவராவது ஒருவர் இந்தப் பிரச்சினை மீது தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிக்கப் போவதாகக் கூறுவரா னால் நிலவுகின்ற அடக்குமுறைக்கு ஒரு விதமான ஆதரவு வழங்குகிறார் என்பதுதான் அர்த்தமாகிறது. அடக்கு பவர்களையும் அடக்கப்படுபவர்களை யும் ஒரே பார்வையில் பார்ப்பது அடக்கு முறை அடக்கப்படுபவரை விரும்பாத ஒரு போக்கிலிருந்து அல்லது அடக்கு முறை நிலவுவதைப் பொருட்படுத்தாத ஒரு போக்கிலிருந்தே உருவாகிறது. இன்னும் சொல்லப் போனால் இப்படியான சந்தர்ப்பங்களில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றப் போவதாகக் கூறுவது அடிப்படையில் அடக்குமுறை யாளர்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு போக்காகும்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்த இலங் கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வைத்து இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்தப் பேச்சின் போது இலங்கை ஜனாதிபதி இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் மேற்கொண்டு வரும் அழுத்தங்கள் பற்றியும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தியப் பிரதமருக்கு விரிவாக எடுத்து விளக்கினார். இவற்றை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்ட மன்மோகன் சிங் இனிவரும் நாள்களில் இலங்கை உள் விவகாரங்களில் இந்தியா தலையிடப் போவதில்லை எனவும் இலங்கையின் பிரச்சினைகளை இலங்கை அரசே தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத் திட்ட வட்டமாகத் தெரிவித்துவிட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே ஹிந்துப் பத்திரிகையின் ஆசிரியரும், இந்திய புலனாய்வுப் பிரிவான றோவின் முக்கியஸ்தர் என்று கருத்தப்படுபவருமான ராம் கொழும்பில் வைத்து இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்க்கும் வலு இலங்கைக்கு உண்டு எனத் தெரிவித் திருந்தார்.இரு கருத்துக்களும் வெவ்வேறு வார்த்தைகளால் வெவ்வேறு விதத்தில் வடிவமைக்கப்பட்டாலும் கூட இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு முக்கிய செய்தியை இலங்கை அரசுக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இனி இந்திய அரசு வெளிப்படையாகத் தலையிடப் போவ தில்லை என்பதுதான் அது. இதன் மூலம் இலங்கை அரசுக்கு "நீங்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் எந்த ஓர் அடக்குமுறைக்கும் துணைவரவும் மாட்டோம். அதேவேளையில் தடுக்கவும் மாட்டோம் என்ற செய்தியும் தமிழக மக்களுக்கு "இலங்கை விவகாரம் தொடர்பாக எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்" என்ற செய்தியும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசும் நீங்களும் பட்டதுபாடு என்ற செய்தியும் சொல்லப்பட்டுவிட்டன.

மேலோட்டமாக கலாநிதி மன் மோகன் சிங்கின் வார்த்தைகள் இலங்கை போர்க்குற்ற அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ள வேளையில் அதைக் கை விட்டுவிட்டதாகத் தோன்றினாலும் அடிப்படையானவை மேற்குறிப்பிட்ட மூன்று செய்திகளுமே. எனவே இந்தியப் பிரதமரின் அறிவிப்பு தமிழ் மக்களுக்குச் சாதகமானதா அல்லது பாதகமானதா என்பதை அண்மைக்கால அரசியல் வரலாற்றை விளங்கிக்கொண்ட எவராலும் வெகு தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும்.

இலங்கையின் இனப்பிரச்சினை ஆரம்பித்த காலம் தொட்டு 1990 இல் இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறும் வரை தமிழ் மக்களுக் குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு இருந்தே வந்தது. ராஜீவ் காந்தியின் கொலையை அடுத்து இந்தியாவில் விடுதலைப் புலிகள் பயங் கரவார இயக்கமாகத் தடை செய்யப் பட்டது. அத்துடன் இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பான விடயங்களில் இந்தியா நேரடியாகத் தலையிடுவதை நிறுத்திக் கொண்டது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்ட போது இரு தரப்பினராலும் இந்தியாவின் ஒத்துழைப்பு கோரப்பட்ட போதும் இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்தியாவின் ஏதோ ஒரு நகரத்தில் பேச்சுக்களை நடத்த அனுமதி கோரியபோதும் இந் தியா அதை மறுத்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு சுற்றுப் பேச்சுக்கள் முடிந்த பின்பும் அனுசரணை யாளர் எரிக் சொல் ஹெய்ம் அவற்றின் பெறுபேறுகள் தொடர் பாக புதுடில்லி சென்று அறிவித்தே வந்தார்.

இந்தியா இந்தப் பேச்சுக்களில் நேரடியாகக் கலந்து கொள்ளாத போதும் இதைப் பயன்படுத்தி எதிர்காலத்துக் கான ஒரு வலையமைப்பைப் பின்னிக் கொண்டது. ஒவ்வொரு முறையும் நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் பேச்சுகள் இடம்பெற்ற போது ஊடக நிருபர்களாக ராஜதந்திர சேவையில் உள்ளவர்களாகப் பேச்சுக்களில் கலந்து கொண்ட இரு தரப்பினரிடமும் நெருக்க மான உறவுகளைக் கொண்டிருந்தனர். இதன்மூலம் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலி களின் முக்கிய ஆதரவாளர் கள் இனம் காணப்பட்டனர். விடுதலைப் புலிகளின் பலங்கள், பலவீனங்கள் கணக்கிடப்பட்டு அவர் களில் சிலரை விலைக்கு வாங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அன்ரன் பாலசிங்கத்துக்கும் வேறு சிலருக்கும் முரண்பாடு ஏற்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.


அதாவது தலையிடாக் கொள்கைகளின் பேரில் இந்தியப் புலனாய்வுப் பிரிவுப் பேச்சுக்களைத் தோல்வியடைய வைக்கவும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுக்குள் முரண்பாடு களை உருவாக்கவும் முழு வீச்சில் செயற்பட்டது.இப்போது மீண்டும் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இன்னுமொரு முறை இந்தியா தனது தலையிடாக் கொள்கையைப் பிரகடனம் செய்துள்ளது.

அதாவது பேச்சுகள் இடம்பெறும் காலங்களிலேயே இந்தத் தலையிடாக் கொள்கை முனைப்படைகிறது என் பதை நாம் அவதானிக்க முடியும். 2002 ஆம் ஆண்டு பேச்சுகள் இடம் பெறும் போது விடுதலைப் புலிகள் உயர்ந்த பட்ச பலத்துடன் இருந்தனர். விடு தலைப்பிரதேசங்களை அமைத்துச் சொந்த நிர்வாகக் கட்டமைப்புக்களை நிலை நிறுத்துமளவுக்கு மட்டுமன்றி தரைப்படை, கடற்படை, விமானப்படை, சிறந்த புலனாய்வுப் படை என்பன கொண்ட ஓர் அரசுக்குரிய சகல அம்சங்களையும் கொண்டு அவர்கள் பலத்துடன் விளங்கினர். இந்த நிலைமை அவர்களின் பேரம் பேசும் வலுவை ஸ்திரப்படுத்தியிருந்தது. எனவே அன்று அவர்கள் இலங்கை அரசுடன் ஒரு சமாந்தரமான அந்தஸ்திலிருந்து பேச்சுக்களை நடத்தினர்.

எனினும் அந்தப் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்து மீண்டும் போர் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போரில் சகல வல்லரசு நாடுகளையும் தன் பக்கம் திரட்டுவதிலும் விடுதலைப் புலிகளைத் தனி மைப்படுத்துவதிலும் இலங்கை அரசு வெற்றிபெற்றது. இந்தப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக் கப்பட்டு அந்தக் கட்டமைப்பு முற்றாகவே சிதைக்கப்பட்டது. தமிழ் மக்களின் பலமாக இருந்த விடுதலைப் புலிகள் இலங்கையின் போர்க் களத்திலிருந்து மட்டுமன்றி அரசியல் களத்திலிருந்தும் முற்றாகவே துடைத்தழிக்கப்பட்டனர்.

ஆயுத உதவி, படைப் பயிற்சி, தொழில்நுட்ப உதவி, புலனாய்வுத்தகவல்கள் எனப் பல்வேறு விதமான காத்திரமான பங்கை வழங்கி இலங்கை அரசு இந்தப் போரில் வெற்றி பெற இந்தியா முக்கிய பங்காளியாக விளங் கியது. அதிலும் போரின் இறுதி நாள் களில் ஒரு போர் நிறுத்தம் ஏற்படுத்த மேற்கு நாடுகள் மேற்கொண்ட முயற்சியை வலுவிழக்க வைத்ததும் இந்தியா தான்.

அதாவது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் பேரம் பேசும் உரிமையை வலுப்படுத்தி வைத்திருந்த விடுதலைப் புலிகளை அழிப்பதில் இந்தியா முன்னின்று செயற்பட்டுள்ளது என்பதை எவருமே மறுத்துவிடமுடியாது. எனவே புலிகள் வழங்கிய அதே பலத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு. ஆனால் இந்தியாவின் செயற்பாடுகள் மாறாகவே உள்ளன.இன்று தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய பலம் என்பது தமிழ் மக்களின் ஐக்கியம், உரிமைக் கோரிக்கைகளின் தார்மீக நியாயம் என்பன மட்டுமே. இவற்றை வைத்துக் கொண்டே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு மேசைகளில் தன் நடவடிக்கையைத் தொடர்கிறது.தமிழ் மக்களின் ஐக்கியம் என்பதில் இரண்டாவது கேள்விக்கே இடமில்லை. தமிழ் மக்கள் எவ்வித சலனமுமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின் அணி திரண்டுள்ளனர்.

அதேபோன்று புலம் பெயர் மக்களின் போராட்டங்களும் ஏனைய நடவடிக்கைகளும் மேற்குலக நாடு களைத் தமிழ் மக்களின் நியாயங்களை ஏற்கவைத்துள்ளன. மேலும் தமிழக மக்கள் வழங்கி வரும் பேராதரவும் நடத்தும் போராட்டங்களும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் பல சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச அக்கறைகளும் தமிழ் நாட்டில் ஏற்பட்டு வரும் எழுச்சிகரமான சூழலும் இந்தியா தொடர்ந்தும் இலங்கை விட யத்தில் இலங்கை அரசுக்குச் சாதகமாகப் பகிரங்கமாகச் செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது. அப்படித் தலையிடுவதானால் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவே செயற்பட வேண்டி வரும்.இப்படியான நிலையில்தான் இந்தியா இனி இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை எனத் திடீரெனத் தெரிவித்துள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இது இலங்கையின் நடவடிக்கைகளில் இந்தியா அதிருப்தி கொண்டு எடுத்த ஒரு முடிவு போலவே தென்படும்.ஆனால் உண்மையில் தமிழ் மக்களுக்குத் தான் ஆற்ற வேண்டிய தார்மீகக் கடமையிலிருந்து விலகிக் கொள்ளும் அப்பட்டமான ஒரு தந்திரோபாய நடவடிக்கையே இதுவாகும் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை.