Monday 24 October 2011

டீன் ஏஜ் (Teenage) பெண்களை கவனமா பார்த்துக்கங்க!!


டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம். பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை டீன்-ஏஜ்என்கிறோம். இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவசியம்.

உடல் வளர்ச்சி மாற்றம் .

தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி அவசியம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு டீன் ஏஜ் பெண்கள் ஆளாகின்றனர்.

எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.

பாலியல் தொந்தரவு.

டீன் ஏஜ் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய துன்பம் அந்நிய ஆடவர்களினால் எற்படும் பாலியல் தொந்தரவுதான். இதனால் எண்ணற்ற பெண்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் மனச்சிதைவுக்கு ஆளாகின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் பெண்குழந்தைகளின் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு அன்பான ஆறுதலான வார்த்தைகளால் வாழ்வின் சூட்சுமத்தை புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

டீன் ஏஜ் பருவத்தில்தான் எதையும் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும். அப்பொழுது பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கூட கேட்க மறுத்து தங்கள் இஷ்டம் போல செயல்பட தொடங்குவார்கள். எனவே டீன் ஏஜ் பெண்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பதை விட அன்பினால் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

சுத்தம் பற்றிய புரிதல் .

இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

அடுத்து, இளம் பெண்களுக்கு, சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும். பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.