Tuesday 1 November 2011

திருமணத்தால் ஆண்களுக்குத்தான் மகிழ்ச்சி, பெண்களுக்கு..?!


திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர் எவ்வளவோ நச்சரித்தாலும் சில இளைஞர் கள் பிடிவாதமாக மறுத்துவருகிறார்கள். `திருமணம், ஒரு மனிதனை அடிமையாக்கி விடும், அவனது எல்லா மகிழ்ச்சி, சுதந்திரத்தையும் பறித்துவிடும், திருமணத்தால் பலன் பெறுபவர்கள் பெண்களே’ என்பது திருமணத்தை மறுக்கும் இளைஞர்களின் திடமான நம்பிக்கை.
திருமணமë என்ற பொறுப்புச் சிலுவையைத் தூக்கித் திரிவதைவிட, திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழும் `லிவ்-இன்’ முறையை நாடலாம் என்ற மனோபாவம் இளைஞர்களிடம் பெருகி வருகிறது. எப்படியோ முடிந்தவரை திருமணத்தைத் தள்ளிப் போட நினைக்கிறார்கள்.
ஆனால் இளைஞர்களின் இந்த எண்ணம் சரியா?
- இல்லை என்பதே வாழ்வியல் நிபுணர்களின் கருத்து.
திருமணம் என்பது, ஆண்களின் நல்ல ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது என்பது அவர்கள் கருத்து. காரணம், மனைவிகள் கணவன்மார்களின் நலத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கணவருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதால், மனைவியால் துணைவரின் இதய நோய், சர்க்கரைநோய் போன்றவற்றுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகளை உடனடியாக உணர்ந்துகொள்ள முடிகிறதாம்.
திருமணம், மனஅழுத்தத்தில் இருந்து ஆண்களைக் காக்கிறது, அதேநேரத்தில் மணமான ஆண்களுடன் ஒப்பிடும்போது மணமான பெண்கள் இருமடங்கு மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அனைத்து வயதினரிடமும் நடத்தப்பட்ட ஆய்வில், மனைவிகளை விட கணவன்மார்கள் திருமண வாழ்வில் அதிகபட்சத் திருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
திருமணமாகாத பெண்கள், திருமணமான பெண்களை விட அதிக சந்தோஷத்தை அனுபவிப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஆண்கள் விஷயத்தில் இது அப்படியே நேரெதிராக இருக்கிறது.
மனைவியுடன் வாழும் ஆண்களைவிட மனைவியை இழந்த ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதவையாவது பெண்களின் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையாம்.
1994-ம் ஆண்டில் அமெரிக்காவில் செக்ஸ் வாழ்க்கை தொடர்பாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மிகவும் மகிழ்ச்சிகரமான செக்ஸ் வாழ்வை அனுபவிப்பவர்கள் திருமணமான ஆண்களே (88 சதவீதம் பேர்) என்று தெரியவந்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ளாமல் இரண்டுக்கு மேற்பட்ட செக்ஸ் துணையைக் கொண்டிருந்த ஆண்கள் குறைவான சந்தோஷத்தையே அனுபவிக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இது, ஜோடியாக வாழ்வது மனிதகுலத்தின் `டிரேட்மார்க்’ என்று காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். திருமண வாழ்க்கை மீதான வெறுப்பு, மனித சமூகத்தை மிரட்டிக் கொண்டி ருக்கும் ஐந்து பெரும் அபாயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சரி, ஆண், பெண் இருவருமே திருமண வாழ்க்கையை இனிக்கச் செய்வது எப்படி?
உங்களைப் பிடிக்காத நபரைத் திருமணம் செய்யாதீர்கள். உங்களுடன் கரம் கோர்ப்பவர், உங்களை விருமëபுபவராக இருக்க வேண்டும். திருமணத்துக்குப் பின் எல்லாம் சரியாகிவிடும் என்று கற்பனைக்கோட்டை கட்டாதீர்கள்.
உங்களுக்கும், உங்கள் வருங்காலத் துணைக்கும், அவரது பெற்றோருக்கும் எந்தளவுக்குப் பொருந்திப் போகும் என்று திருமணத்துக்கு முன்பே சோதித்துக் கொள்ளுங்கள்.
ஒருவர் திருமண வாழ்வில் எப்படி இருப்பார் என்பதற்குச் சரியான அடையாளம், அவர் பிறந்த குடும்பத்தில் எப்படி இருக்கிறார் என்பது.
ஆண் செய்யும் வேலைகளைத்தான் ஆண் செய்ய வேண்டும், பெண் செய்யும் வேலைகளைப் பெண்ணே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உதறுங்கள். மனைவியே எப்போதும் சமைத்து, வீட்டைப் பெருக்கி, கழுவித் துடைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. இன்று, கணவன், மனைவியின் பொறுப்புகள் மாறியுள்ளன அல்லது மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிதர்சனத்தை உணராவிட்டால் உங்களுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சும்.
வாழ்க்கைத் துணையுடனான உரையாடலில் வெளிப்படையாக இருங்கள்.
கணவன்- மனைவிக்கும், மனைவி- கணவனுக்கும் விசுவாசமாக இருப்பதில் மாறாத உறுதி காட்ட வேண்டும். பார்வையையும், மனதையும் அலைபாய விடுவது, நிம்மதியைக் குலைக்கும், குடும்ப அமைதியைத் தகர்க்கும். ஒரே துணையுடன் வாழ்வதுதான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சி தரும்.
நன்றி-தினத்தந்தி