Sunday 6 November 2011

அணுமின் நிலையம் ஒரு வரப்பிரசாதம்’- கலாம்



கூடன்குளம் அணுமின்நிலையம் முழு பாதுகாப்பானது என சுற்றி்பார்த்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே., அப்துல்கலாம் கூறினார்.பீதியை ஏற்படுத்தி பெரும் போராட்டக்களமாக மாறியிருக்கும் கூடன்குளத்தி கலாம் முகாமிட்டுள்ளார். இவர் அணுமின் நிலையம் முழுவதும் சுற்றிப்பார்ப்பதுடன், போராட்டக்குழுவினர் அச்சம் தீர்க்கும் வகையில் மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். ‌அணுமின் நிலையத்திற்கு ஆதரவு அளி்ப்போர் கலாம‌ை சந்தித்து பேசினர். எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்குழுவினரை சந்திக்கவில்லை. அதே நேரத்தில் அவர்கள் என்னை சந்திக்க வந்தால் சந்திப்பேன் நானாக செல்ல மாட்டேன் என்றார். கலாம் கருத்துக்கு போராட்டக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அணுமின் நிலையம் பாதுகாப்பானது : அணு மின்நிலையத்தை சுற்றிப்பார்த்துவிட்டு அப்துல்கலாம் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அவர் அப்போது கூறுகையில்: பாதுகாப்பு பணிகள் முழு திருப்தி அளிக்கிறது. நான் இந்த அணு மின் நிலையத்திற்கு தற்போது 2 வது முறை வந்திருக்கிறேன். இன்று அணுமின் நிலைய அதிகாரிகளுடன் பல மணி நேரம் ஆலோசித்தேன். இந்த அணுமின் நிலையம் முழு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கழிவுகள் 75 சதம் மறு சுழற்சி மூலமும், ஏனைய 25 சதம் ஆலையில் வைக்கப்படும். அதி நவீன பாதுகாப்பு இருப்பதால் கதிர்வீச்சு வெளியாகாது. சுனாமி, பூகம்பம் போன்ற நிகழ்வின்போதும் எவ்வித பாதிப்பையும் தராது. இது இப்பகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றார்.
மத்திய அரசின் தூதராக வந்துள்ளீர்களா என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கலாம், யாருடைய கோரிக்கையின் படியும் தான் இங்கு வரவில்லை என்றும், அணுசக்தி சுத்தமான சக்தி என்றும் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனர்ஜி இன்டிபென்டன்ட் என்று சொல்லக்கூடிய சக்தி சுதந்திரத்திற்காக பாடுபட்டு வருவதாகவும், இதற்காக காற்றாலை மின்சக்தி, சூரிய ஒளி மின்சக்தி, பயோ மின்சக்தி மற்றும் அணுமின் சக்தி ஆகியவை மேம்பட தான் முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.ஒரு விஞ்ஞானி என்ற முறையில் மின்சாரத்தின் அருமையை தான் அறிந்துள்ளவன். இப்பகுதி மக்களின் சந்ததிகள் சிறப்பாக வாழ கூடங்குளம் அணுமின் நிலையம் கண்டிப்பாக தேவை என்றும் கூறினார்.
கலாம் கருத்துக்கள் ஏமாற்றம் அளிக்கிறது – போராட்டக்குழு : அப்துல் கலாம் கூறிய கருத்துக்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; அப்துல் கலாம் கூறிய கருத்துக்கள் எல்லாம் கேள்விப்பட்டதுதான். கேட்டு, கேட்டு புளித்து போனதுதான். புதிதாக ஒன்றுமில்லை. நம்பிக்கை தரும் விஷயம் இல்லாமல் போனது. இவரது பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது. பல நாட்களாக போரடி வரும் எங்களை சந்திக்காமல் இவ்வாறு பேட்டி அளிப்பது அவரது அந்தஸ்துக்கு ஏற்புடையது அல்ல என்றார். அவருடைய பேச்சு வருத்தத்தை தருகிறது. கழிவுகள், கழிவுகள் செயலிழப்பு குறித்து விளக்கம் வேண்டும். 12 லட்சம் பேர் வசிக்கின்றனர் அவர்களை அப்துல்கலாம் நினைத்து பார்க்க வேண்டும். எங்கள் மக்களை இழக்க தயராக இல்லை. ரஷ்யாவில் போய் வைக்க வேண்டியதுதானே. இந்தியாவில் வளர்ச்சி தேவை. 15 முதல் 20 மெகாவாட் மின்சாரம் காற்றாலை, சூரிய ஒளி மூலம் தயாரிக்கலாமே, அணு சக்தி திட்டத்தினால்தான் நாம் வாழுகிறோம் என்பது அப்பட்டம், இந்த அணுமின் நிலையம் எங்களுக்கு வேண்டாம் என்றார்.
கூடன்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு பிரச்னையை முன்வைத்து பல நாட்களாக போராடி வருகின்றனர். உண்ணாவிரதம் மற்றும் இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடக்கிறது. ஒரு தரப்பு போராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மக்களின் அச்சத்தைப் போக்க விஞ்ஞானி முத்துநாயகம், புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சாந்தா உள்ளிட்டோரை கொண்ட 15 பேர் கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், போராட்டக் குழுவை சந்தித்து, மக்களின் அச்சத்தைப் போக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணியளவில் கலாம் அணுமின் நிலையத்திற்கு சென்றார். இவருடன் இந்திய அணுசக்தி கழக தலைவர் ஜெயின் , திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜி, நிலைய இயக்குனர் சுந்தர், தலைமைப் பொறியாளர் ஜின்னா மற்றும் விஞ்ஞானிகளை சந்தித்துப் பேசினார். அணு நிலையம் முழுவதும் சுற்றிப்பார்த்தார். மின்சாரம் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து கேட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மதியம் நிருபர்களை சந்தித்து பேசினார்.
அணு எதிர்ப்பு போராட்டக் குழு பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அப்துல் கலாமை சந்தித்து பேசினாலும் அவரது கருத்தை ஏற்க மாட்டோம் என போராட்டக்குழுவினர் முன்னதாக கூறியிருந்தனர். கலாம் வருகையையொட்டி மத்திய, மாநில பாதுகாப்புப் படை போலீசார், தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
.4 அடுக்கு பாதுகாப்பு உள்ளது மத்திய அமைச்சர் : கூடன்குளம் அணுமின்நிலையம் முற்றிலும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று கூறுகையில்; கூடன்குளம் அணுமின்நிலையம் தொடர்பான அப்பகுதி மக்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். எவ்வித பிரச்னையும் எற்படுத்தாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித சர்ச்சையும் எழாத வகையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாத சுனாமி தாக்குதல் வந்தாலும் இந்நேரத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக இருக்கின்றன என்றார்.