Wednesday 7 December 2011

திருக்கார்த்திகை தீபம்!-டிச.,8 – திருக்கார்த்திகை


மனிதன் தோன்றிய காலத்தில், கற் களாலோ, உலோகங் களாலோ அவன் தெய்வ வடிவத்தை வடிக்க வாய்ப்பு கிடைத்திருக்காது. அவன் இருளைக் கண்டு பயந்தான். காலையில் சூரிய உதயமானதும், ஒளி கண்டு மகிழ்ந்தான். தன்னைக் காக்கும் சக்தியாக நினைத்தான். காலப் போக்கில், நெருப்பு மூட்ட கற்று, இரவிலும் ஒளியேற்றி வைத்தான். மரங்களின் நார்களை திரியாக்கி எரித்தான். நாகரிகம் வளர, வளர இன்று மின்சார விளக்குகளை பயன்படுத்துகிறான். ஆக, ஒளியை அவன் அன்றும், இன்றும் தெய்வமாக பார்க்கிறான். அதனால், தான் வணங்கும் தெய்வங் களையே ஒளிவடிவில் கண்டான்.
சபரிமலையில் ஐயப்பனை மகரஜோதியாக பார்த்தான். திருவண்ணா மலை உச்சியில் நெய் தீபம் ஏற்றி, சிவபெருமானை பரஞ்ஜோதியாய் கண்டான். இதற்காக, இரண்டு திருவிழாக்களும் உருவாயின. வட மாநிலங்களில், தீபாவளியன்று தீபம் ஏற்றி வழிபட்டனர். தமிழகத்தில், தீபத்துக்கு மரியாதை செலுத்துவதற்கென்றே திருக்கார்த்திகை திருவிழாவை தனியாக உருவாக்கினர்.
தீபத்திருவிழா, ஆணுக்கு பெண் சமம் என்பதைக் காட்டுகிறது. பிருங்கி என்ற முனிவர், சிவபெருமானை மட்டுமே வழிபடுபவராக இருந்தார். அவர் கைலாயம் சென்று, சிவனை வழிபடும் சமயத்தில், பார்வதி தேவி இருந்தாலும், அவளை வணங்குவதோ, வலம் வருவதோ இல்லை. இதனால், அம்பாளுக்கு வருத்தம் ஏற்பட்டது. அம்பாளின் முக்கியத்துவத்தை பிருங்கிக்கு உணர்த்த எண்ணிய சிவன், ஒருமுறை அவள் அருகில் நெருங்கி அமர்ந்தார். தன்னை வலம் வரும் போது, அம்பாளையும் சேர்த்து வலம் வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று அவர் கணக்குப் போட்டார்.
ஆனால், புத்திசாலியான பிருங்கியோ வண்டு வடிவெடுத்து, இருவரின் ஊடே புகுந்து சிவனை மட்டும் சுற்றினார். இதனால், சிவன், அம்பாளுக்கு தன் உடலின் இடப்பாகத்தைக் கொடுத்து, “அர்த்தநாரீஸ்வரர்’ என்ற பெயரைப் பெற்றார். “அர்த்தம்’ என்றால், “பாதி!’ “நாரீ’ என்றால் பெண். பாதி பெண் வடிவம் கொண்ட அந்த வடிவத்தை, பிருங்கியால் தவிர்க்க இயலவில்லை. சிவனே, அம்பாளுக்கு முக்கியத்துவம் தந்ததால், அன்று முதல் அம்பாளையும் வலம் வரத் துவங்கினார் பிருங்கி.
இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு திருக்கார்த்திகை தினத்தன்று என்பர். அதனால் தான், திருவண்ணா மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் முன், அர்த்தநாரீஸ்வரர் கோவில் வாசலுக்கு <ஊர்வலமாக எடுத்து வரப்படுவார். அவருக்கு தீபாராதனை காட்டிய பிறகே, மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை ஒரு அற்புதத்தலம். பல சித்தர்கள் இந்த மலையில் வசித்துள்ள னர். இப்போதும், அரூபமாக அவர்கள் இங்கு தவமிருப் பதாக நம்பிக்கை உண்டு. இந்த மலை, 2,668 அடி உயரம் உடையது. சுற்றளவு, 14 கி.மீ., எண்கோண அமைப்பிலுள்ள இந்த மலையைச் சுற்றி, அஷ்டலிங்கக் கோவில்கள் <உள்ளன.
இந்த மலையை வலம் வந்த ஒருவர், தன் வாழ்வுக்குப் பிறகு சொர்க்கத்தை அடைவார். அவருக்கு, சந்திரன் வெள்ளை குடை பிடிப்பான். சூரியன் விளக்கேந்தி வருவான். இந்திரன் மலர் தூவுவான். குபேரன் என்ன செல்வம் வேண்டுமென கேட்டு பணிந்து நிற்பான் என்கிறது அருணாசல புராணம்.
அண்ணாமலையை பகலில் வலம் வருவதை விட, இரவில் வலம் வருவதே நல்லது. ஏனெனில், அந்த சமயத்தில் சந்திரனின், 16 கலைகளில் இருந்தும் வரும் கதிர்கள் உடலில் படும். சந்திரனே மன தைரியத்தை தருபவர். கிரிவலத்தால் தைரியம் அதிகரிக்கும். மலையை வேகமாக வலம் வருகிறோம் என்ற பெயரில், மற்றவர்களுக்கு இடையூறு தரும் வகையில் ஓடவோ, அதிவேகமாக நடக்கவோ கூடாது. உங்கள் இயல்பான நடை போதுமானது. “நமச்சிவாய வாழ்க, சிவாய நம, அண்ணாமலைக்கு அரோகரா, அருணாசலமே போற்றி…’ போன்ற தெய்வீக மந்திரங்களை தவிர, வேறு எதுவும் பேசக் கூடாது.
கார்த்திகை தீபத்தன்று, வீடுகளில் குறைந்தபட்சம், ஒன்பது விளக்குகள் ஏற்ற வேண்டும். சிவன், முருகனுக்கு கொழுக்கட்டை, கார்த்திகை பொரி, அவல் படைக்க வேண்டும்.
தீபத்திருவிழா உங்கள் வாழ்வை ஒளி பெற செய்யட்டும்.