Thursday 15 December 2011

பொழுது விடியவேண்டும்....

கூரையிலிருந்து விழும் நீரை சேமிக்க
பல வடிவப் பாத்திரங்களை
பாதுகாப்பாய் வைக்கின்றேன்!
விழுந்த நீர் உடைசல் வழியே
வீட்டிற்குள் ஓர் ஓடம் அமைக்கிறது..!

ஒட்டுத் துணியும் நனைந்து கொண்டிருக்க
விட்டுப்போன நெருப்பை மூட்ட முயற்சிக்க
நனைந்த தீக்குச்சி நக்கலாய் நகைக்கிறது!

ஈரமான மண் அடுப்பினுள் குளிருக்கு பயந்து போய்
ஒண்டியிருக்கும் பூனைக்குட்டியை புறப்பட வைக்க
மனம் இசையவில்லை!
விரிந்த சுவர் வீரியமாய் பதம் பார்ப்பதற்குள்
வீட்டை சரி செய்ய வேண்டும்...
 
காலமெல்லாம் காதல் செய்து வாழ்ந்து பார்க்க
கரம் பிடித்து கூட்டி வந்தவனை
காலன் கூட்டிச்சென்றுவிட்டான் காலராவினில்...
காரணத்தைக் கேட்டால்
சுற்றுப்புறம் தூய்மையில்லை
வந்தது பதில் வலுவாய்...

வக்கத்த எங்களைக் காட்டி
ஓட்டுக்கேட்ட சீமான்கள்
எங்களையும் கவனிக்கவில்லை
எங்கள் சுற்றுப்புறத்தையும்
சுற்றிப் பார்க்கவில்லை
அவர்கள் சுற்றுவது
எல்லாமே அயல் தேசமே....

உள்ளூரில் உப்பிற்குக் கூட வழியில்லாமல்
நாங்கள் பிழைப்பு நடத்துகிறோம்...
பொறுப்பாய் வாழ்ந்த மச்சான்
பொறுமையின்றி பூமியிலே எனைத்
தவிக்க விட்டு பரலோகம் சென்றுவிட்டான்

நாளெல்லாம் வாழ்வது நரகத்தில் என்றால்
நனைந்த பாயின் ஓரங்களில்
நாயகனின் வாசமோ நளினமாய்...

ஆசையாய்ப் பிறந்த மகனையும்
மச்சானின் மானத்தையும்
அணைத்துக் கொண்டு கிடக்கின்றேன்...
அடுத்த ஈரம் கண்களின்
வழியே மகனை நனைப்பதற்குள்
பொழுது விடியவேண்டும்
எங்களுக்கும் சேர்த்து.....