Saturday 17 December 2011

பணத்தில் குளிக்கும் `வாடகைத் தாய்கள்’!


ராத்தி மொழி திரைப்படமான `மாலா ஆய் வஹாய்ச்சி’ (`நான் தாயாக விரும்புகிறேன்’) ஓர் எளிமையான கேள்வியை எழுப்பியது:
வறுமையின் காரணமாக `வாடகைத் தாய்’ ஆகும் யசோதாவுக்கு, அமெரிக்கப் பெண்மணி மேரிக்காக தான் பெற்றெடுக்கும் குழந்தை மீது உரிமை உண்டா, இல்லையா என்பதே அது. சினிமாத்தனத்துக்கே உரிய விதத்தில், `உரிமை உண்டு’ என்பதாக படத்தின் முடிவு இருந்தது.
2002-ல் இந்தியாவில் `வாடகைத் தாய்’ முறை சட்டபூர்வமாக்கப்பட்ட பிறகு, வணிகரீதியாக இத் தொழில் வளர்ந்திருக்கிறது. ஆனால் வாடகைத் தாய்களின் உரிமை, அவர்களுக்குக் கொடுக்கப் பட வேண்டிய நியாயமான கட்டணம், அளிக்கப்பட வேண்டிய வசதிகள் குறித்தெல்லாம் இன்றும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
இந்தியாவில் வளம் கொழிக்க வளர்ந்துவரும் மருத்துவ சுற்றுலாவின் ஓர் அங்கமாகியிருக்கிறது `வாடகைத் தாய்’ தொழில். இந்தியாவில் ஒரு பெண் வாடகைத் தாயாக இருப்பதற்குக் கொடுக்கப்படும் அதிகபட்ச கட்டணம் ரூ. 7 லட்சம். இது அதிகமாகத் தெரிந்தாலும், அமெரிக்காவில் வாடகைத் தாய் கட்டணமான ரூ. 35 லட்சத்துடன் ஒப்பிடும்போது இது குறைவு. 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி இந்தியாவில் வாடகைத் தாய் தொழிலில் ஓராண்டுக்கு புழங்கும் பணம் பல்லாயிரம் கோடி! நாட்டில் வாடகைத் தாய் தொழிலின் மையமாக குஜராத் மாநிலத்தின் சிறுநகரான ஆனந்த் திகழ்கிறது.
`வாடகைத் தாய்மை’ தொடர்பான பல சிக்கலான விஷயங்களுக்கு சட்டம் தீர்வு காணவில்லை- இது தொடர்பான ஒரு மசோதா, பாராளுமன்றத்தில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்றப்படவிருக்கிறது. இதற்கிடையில், மகளிர் ஆரோக்கியத்துக்கான சேவை அமைப்பான `சமா’, மேற்கண்ட மசோதா குறித்த புதிய கேள்விகளை எழுப்புகிறது. `கட்டுப்பாடில்லாமல் பரவும் வாடகைத்தாய் முறையில் பல தார்மீக நெறி சார்ந்த விஷயங்கள் கவனிக்கப்படவில்லை’ என்கிறார்கள் இவர்கள்.
மகப்பேறு மருத்துவமனைகளையும், வாடகைத் தாய் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களையும், அவர்களுக்கும் வாடகைத் தாய்களுக்கும் உள்ள தொடர்புகளையும் ஒழுங்குபடுத்த அரசு நினைக்கிறது. இத்தொழிலைக் கண்காணிக்கும் அரசின் முடிவை `சமா’ போன்ற அமைப்புகள் வரவேற்கும் நிலையில், வாடகைத் தாய்களை விட, அவர்களை நாடும் தம்பதிகளுக்கு அதிக உரிமைகள் அளிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்றன.
வாடகைத் தாய்களுக்குத் தாங்கள் பெற்றெடுக் கும் பிறரின் குழந்தைகள் மீது எவ்வித உரிமை யும் இல்லை என்று மசோதா தெளிவாகக் கூறுகிறது. ஆனால், கரு கலைந்தாலோ, கர்ப்பத்தின்போது வேறு சிக்கல்கள் ஏற்பட்டாலோ அந்த வாடகைத் தாய்க்குப் பணம் கொடுக்கப்பட வேண்டுமா என்று குறிப்பிடவில்லை.
21-ல் இருந்து 35 வயது வரையுள்ள பெண்கள் தான் வாடகைத் தாய் ஆகலாம் என்று இம்மசோதா தெரிவிக்கிறது. ஒரு பெண், மூன்று குழந்தைகளை வாடகைத் தாயாக இருந்து பெற்றெடுக்கலாம் என்ற முந்தைய நிலையில் இருந்து தற்போது ஐந்து குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதியுள்ளது.
வாடகைத் தாய்க்கான முதல் மருத்துவமனையான அகாங்ஷா குஜராத்தில் தொடங்கப்பட்டபோது அதன் நிறுவனரான டாக்டர் நயனா எச். படேல், `வாடகைத் தாய்’ முறை, சம்பந்தப்பட்ட எல்லோருக் கும் நன்மை பயக்கும் விஷயம் என்று திரும்பத் திரும்பக் கூறினார். அதை ஒத்துக்கொள்ளும் அனேக மருத்துவர்களும், வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் நலத்தைக் கவனித்துக்கொள்வது அந்தந்த மருத்துவமனையைப் பொறுத்தது என்கிறார்கள்.
“பெரும்பாலான மருத்துவமனைகள் வாடகைத் தாய்களை பலவிதங்களில் பாதுகாக்கின்றன. அவர்களின் ஆரோக்கியம், தேவையான ஊட்டச்சத்துகள், அன்றாடத் தேவைகள் ஏன், சிலவேளைகளில் அந்தப் பெண்களின் குடும்பத்தைக் கூட கவனித்துக்கொள்கின்றன” என்று டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனை மருத்துவர் ருமா சாத்விக் கூறுகிறார்.
ஆனால் இப்போதைக்கு, வாடகைத் தாய்களின் நலன் காக்கப்படுவது அந்தந்த மருத்துவமனை, மருத்துவர்களைப் பொறுத்ததாகத்தான் உள்ளது.
பிரபல இந்திநடிகர் அமிர் கானுக்கு 48 வயது. இவரது மனைவி கிரண் ராவுக்கு 38 வயது. இவர் இந்தியில் பிரபல இயக்குனராகவும் இருக்கிறார். தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ள சில மருத்துவத் தடைகள் இருந்த நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினர். ரகசியமாக வாடகைத்தாயை ஏற்பாடு செய்து, பெருந்தொகை கொடுத்து தங்கள்ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர்.
2008-ல் ஓர் இந்திய வாடகைத் தாயுடன் ஒப்பந்தம் செய்த ஜப்பானியத் தம்பதி ஒன்று விவாகரத்துப் பெறத் தீர்மானிக்க, விவகாரம் சிக்கலானது. அந்த விஷயத்தைக் கவனித்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஒரு மருத்துவர், ஜெய்ப்பூரின் சாத்னா ஆர்யா.
இவர், வாடகைத் தாய் விஷயம் குறித்து வருத்தப்பட்டுப் பேசுகிறார்…
“வாடகைத் தாய்களை ஒரு பொருளைப் போல, குழந்தை பெற்றுத் தரும் தொழிற்சாலையைப் போலத்தான் நடத்துகிறார்கள். வறுமையான பின்னணியைக் கொண்ட வாடகைத் தாய்களும் தங்களின் உரிமைகளை அறிந்திருப்பதில்லை. இவ்விஷயத்தில், சட்டத்துக்கும், தார்மீக நெறிகளுக்கும் இடையே ஒரு சமநிலையைக் காண அரசின் மசோதா முயல்கிறது. ஆனால் தார்மீக நெறியை மீறும் விஷயங்கள் இன்றும் இருக்கின்றன என்பதுதான் உண்மை.”- என்கிறார்.
அமெரிக்கப் பத்திரிகையாளரான ஸ்காட் கார்னி, குஜராத்தின் வாடகைத் தாய் மருத்துவமனைகள் குறித்து விசாரித்து, `சிவப்புச் சந்தை’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.
அதில், `இந்தியாவுக்கு நான் வருவதற்கு முன்பு, அமெரிக்க மேல்தட்டு வர்க்கத்தினரால்தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்ற நிலை இருந்தது. தற்போதோ, நடுத்தர வர்க்கத்துக்கும் இது சாத்தியமான விஷயம்தான் என்றாகிவிட்டது. இதில் தார்மீகமான விஷயங்கள் குறித்த கேள்விகள் எப்போதும் இருக்கின்றன. ஆனால் இப்போது இத்தொழில் வேகமாக வளர்ந்து வருவது, அந்த விஷயங்களை அவசரமாகக் கவனிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது’ என்று எழுதுகிறார்.
டெல்லியைச் சேர்ந்த வேலைக்காரப் பெண்ணான மஞ்சுவுக்கு வயது 21. இவரது நாத்தனார் இரண்டாண்டுகளுக்கு முன் வாடகைத் தாய் ஆனதால் இவருக்கும் அந்த நப்பாசை எழுகிறது.
“அவ குஜராத்துக்குப் போய் குழந்தை பெத்துக் கொடுத்தா. எங்க வீட்டுல அதை ரொம்ப கமுக்கமா வைச்சிக்கிட்டாங்க” என்பவர் தொடர்ந்து கண்களில் ஆசை மின்னச் சொல்கிறார், “அவளுக்கு நிறையப் பணம் கிடைச்சுது. நான் ஒரு வருடம் முழுசும் சம்பாதிப்பதையும் விட அதிகப் பணம்!”
ஒரு மாதத்துக்கு முன் மஞ்சுவை அரியானாவைச் சேர்ந்த ஓர் உரிமம் பெறாத வாடகைத் தாய் மருத்துவமனையின் பிரதிநிதி ரகசியமாய் சந்தித்திருக்கிறார். வாடகைத் தாயாக இருக்கச் சம்மதமா என்று கொக்கி போட்டிருக்கிறார். அந்த வாய்ப்பை ஏற்கும் முடிவில் இருக்கிறார் மஞ்சு.
“நல்ல தொகை தர்றதா சொல்லியிருக்காங்க. வாடகைத்தாய் ஆவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. அறிவில்லாமல் அஜாக்கிரதையாக இருக்கும் பெண்ணால்கூட தாயாகிவிட முடியும். ஆனால் புத்திசாலிப் பெண்ணால்தான் அதில் பணம் சம்பாதிக்க முடியும்!” என்கிறார், அர்த்தமாக
சிரித்தபடி!
***

வாடகைத் தாய்மார்கள் அதிகரிப்பது ஏன்?

வாடகைத் தாய்மார்கள் அதிகரிக்க என்ன காரணம் என்று கருவாக்கவியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ் விளக்குகிறார்…
கணவரின் உயிரணு, மனைவியின் கருமுட்டை இரண்டையும் எடுத்து, சோதனைக்குழாய் மூலம் கருவாக்கம் செய்து வாடகைத்தாயின் கருப்பைக்குள் செலுத்தி குழந்தையை வளர்த்து பெற்றெடுக்கும் முறையே வாடகைத்தாய் முறையாகும்.
குழந்தை பெற்ற இளம்பெண்களே வாடகைத் தாயாக இருக்கத் தகுதியானவர்கள். 35 வயதுக்குள்ளாக இருப்பவர்களே விரும்பப்படுவார்கள். அவர்களின் உடல் – மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்படும். ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக முடியும்.
பெண்களின் கர்ப்பப் பை பிரச்சினைகளே வாடகைத் தாய்மார்களின் தேவைக்கு காரணமாக இருக்கிறது. கர்ப்பப் பையில் கட்டி ஏற்படுவது, புற்றுநோய் தாக்குவது, கர்ப்பகாலத்தில் அதிக ரத்தப் போக்கு போன்ற பிரச்சினையால் கர்ப்பப்பையை நீக்கிவிடுவது, தொடர்ந்து கருக்கலைப்பு ஏற்படுபவர்கள், கர்ப்பப் பை இல்லாத பெண்கள் (2 ஆயிரம் பெண்களில் ஒருவருக்கு பிறப்பிலேயே கர்ப்பப்பை இருப்பதில்லை) ஆகியோருக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் அவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவதற்காக வாடகைத் தாய்மார்களை தேடுகிறார்கள்.
வாடகைத் தாய், அவரது கணவர், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதி ஆகியோர் இணைந்துதான் குழந்தை பெற்றெடுக்கும் முடிவை எடுப்பார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதிக்கு குழந்தைச் செல்வமும், வாடகைத் தாயின் குடும்பத்திற்கு பணத் தேவையும் இருப்பதால் இரு தரப்பினரும் இணைந்து ஒப்பந்தம் போட்டு குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகுகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு ஜப்பான் தம்பதி ஒன்று இந்திய பெண்ணை வாடகைத் தாயாக்கியது. கரு வளர்ந்து கொண்டிருக்கும்போதே, ஜப்பான் தம்பதியர் விவாகரத்து பெற்றுவிட்டனர். பிறகு அவர்கள் அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள இந்தியா வரவில்லை. அது ஒரு சட்டப்பிரச்சினையாக எழுந்தது.
குழந்தையை விரும்பும் தம்பதியே, கர்ப்பம் முதல் டெலிவரி வரை, வாடகைத்தாயின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்ளும். பிறக்கப்போகும் குழந்தைக்கு மனநலப் பிரச்சினை, உடல் ஊன பிரச்சினை எதுவாக இருந்தாலும் வாடகைத்தாய் பொறுப்பாக மாட்டார். அதற்கு குழந்தையை விரும்பும் தம்பதியே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
வாடகைத்தாய்மார்கள் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் கர்ப்பத்தை சுமப்பதால் இடையில் வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்களுக்கு மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தவறான முடிவெடுத்து குழந்தையை சுமக்கிறோமா? என்ற சந்தேகம் வரலாம். தொடர்ந்து கோபம், விரக்தி கூட ஏற்படலாம். அதற்காக அவ்வப்போது வாடகைத் தாய்மார்கள் கவுன்சலிங் எடுத்துக் கொள்வார்கள்.
வாடகைத் தாயை பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்க பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியின் கருமுட்டை- உயிரணுவை இணைத்தே கரு உருவாக்கப்பட்டிருக்கும் என்பதால் குழந்தைக்கும், வாடகைத் தாய்க்கும் மரபு ரீதியாக எந்த சம்பந்தமும் இருக்காது.
ரத்ததானம் செய்வதுபோல வாடகைத் தாயாக செயல்படுவதும் ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான தம்பதியரின் ஏக்கத்தை தீர்த்து, பாதிப்புடைய ஒரு பெண்ணுக்கு வாழ்வளிக்கும் புனிதமான காரியத்தைத்தான் வாடகைத் தாய்மார்கள் செய்கிறார்கள்.
தமிழகத்தில் வாடகைத் தாய்மார்கள் ஒரு குழந்தைக்கு 3 லட்சம் வரை பணம் பெறுகிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாவிட்டால் முன்பெல்லாம் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். ஆனால் இப்போது அப்படி தவறான முடிவெடுப்பது இல்லை. கருமுட்டை தானம், வாடகைத்தாய் என பல மாற்றுமுறை வழிகள் இருப்பதை தம்பதியர் அறிந்து கொண்டனர். எனவே வாடகைத் தாயை நாடுவோரும் அதிகரித்திருக்கிறார்கள். வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண்களும் அதிகரித்திருக்கிறார்கள். நடிகர், நடிகைகளும் சிறந்த முறையாக இதை நம்புகிறார்கள்!
நன்றி-தினத்தந்தி