Monday 16 January 2012

கண்ணம்மா

“தம்பி இதுல கண்ணம்மான்னு ஒரு பேரிருக்கும். எடுத்துக்குடு” - அந்தப் பெரியவர் தன் சீட்டிலிருந்து என்னிடம் அவரது நோகியாவை நீட்டினார். நோகியா 1100. பலரது ஆல்டைம் ஃபேவரைட் மொபைல்.

பேருந்தில் ஏறும் வாசலை ஒட்டிய, இடதுபுற இரட்டை சீட்டில் நானும் உமாவும் அமர்ந்திருந்தோம். வலது புறம் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார்.

நான் கண்ணம்மாவைத் தேடினேன். மொபைலில். ம்ஹும். ‘K' வரிசையில் அப்படி ஒரு பெயரே இருக்கவில்லை.

“ஐயா.. அந்தப் பேரே இல்லீங்களே..”

“அடென்ன தம்பி.. உன்ரகூட ரோதனையாருக்கு. நமக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாததாலதானே கேட்கறேன்.. ரெண்டு நாள் பேசலைன்னா நம்பர் அவிஞ்சு போயிருமா.... இல்லீன்ற?” என்றார் கொஞ்சம், கோபமும் கொஞ்சம் எரிச்சலும் கலந்த தொனியில்.

“இல்லைங்கய்யா.. கே-ல கண்ணம்மாங்கற பேர் இல்லைங்க...”

“அதெ எவன்கண்டான் கேயாவது ஏயாவது... நல்லாப் பார்த்து எடுத்துக்குடு.. வூட்டுல சமைக்கச் சொல்லோணும்” என்றார்.

மணி இரவு ஒன்பதரை. கோவையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தது பேருந்து.

நான் மறுபடி தேடிவிட்டு “இல்லைங்க...” என்றேன்.

அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உமாவை நோக்கி “நீ பாத்துக்குடும்மணி.. என்ர மருமவப்புள்ள மாதிரி நீயும் வெவரமாத்தான் இருப்ப” என்றார்.

நான் இந்த நேரத்துக்குள் அவரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். உமா சிரித்துக் கொண்டே ‘அந்தப் பேர் இல்லீங்கய்யா.. அவர் பார்க்கறப்ப நானும் பார்த்தேன்’ என்றார்.

“ம்ம்ம்... அப்டீன்னா பாலு இருக்கான்னு பாரேன்” என்றார்.

நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். Balu K, Bala, Balasubbu என்றொரு நான்கைந்து பாலுக்கள் இருந்தனர்.

அவரிடம் சொல்லி, கேட்டேன்.

“எந்த பாலுங்க?”

“என்ர மவன்தான்”

உமா சிரித்துவிட்டார். அவர் பார்க்கவே, ஜன்னலோரம் முகம் திருப்பிக் கொண்டார்.

“அதெல்லாம் இதுல இல்லீங்கய்யா.. என்ன பேர்ல பாலுவை நீங்க இதுல பதிவு செஞ்சிருக்கீங்கன்னு தெரியணும்” என்றேன்.

“என்ர மவனை மொதல்ல ஒதைக்கணும். இந்தக் கெரகம் வேணாம்னா கேட்டாத்தானே..” என்று கொஞ்சம் உரக்கவே - சொல்லிவிட்டு “கொஞ்ச நேரம் முந்திகூட கூப்டான் கண்ணு...” என்றார்.

“அப்டீன்னா இருங்கய்யா..” என்று சொல்லிவிட்டு ரிசீவ்ட் காலை சோதித்தேன். பாலு.கே என்றிருந்தது.

அதை டயல் செய்து ‘பேசுங்க..’ என்று அவரிடம் நீட்டினேன்.

என்னை ஆழமாக முறைத்து.. ‘இப்ப மட்டும் எப்படிக் கெடச்சுதாம்?’ என்று கேட்டுவிட்டு ‘அடே பாலு.. வூட்லயா இருக்கியா தோட்டத்துலயா?...’ என்று உரத்த குரலில் பேசத் தொடங்கியவர் ‘ பாலு... பாலு.... இதென்ன அவன் பேசமாட்டீங்கறான்..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

நான் ஃபோனை வாங்கிப் பார்க்க ரிங்டோன் போய்க் கொண்டிருந்தது. ‘இன்னும் அவர் எடுக்கலைங்க’ என்று சொல்லச் சொல்ல எடுத்தார் யாரோ. அந்தப் பெரியவரிடம் நீட்டினேன்.

அவர் மகன்தான். இரவே திரும்பிவிடுவதாகவும், அதனால் மருமகளை சமைத்து வைக்கச் சொல்லியும் கூறினார்.

அதற்குள் நான் என் ஃபோனில் Angry Birds விளையாட ஆரம்பித்திருந்தேன். அவர் ஃபோனை வைத்துவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.

எடுத்தவர் பேசத் தொடங்கினார். இப்போது அழைத்தது அவர் மருமகள். பேசியவர் முடிவில்.. “அவன் தோட்டத்துல இருப்பான். உன்ரகிட்டயே சொல்லிடலாமுன்னு பார்த்தா, இங்க ஒரு தம்பி இதுல உன்ர பேரே இல்லைன்னுடுச்சு” என்று என்னைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.

ஃபோனை வைத்துவிட்டு ‘இப்ப பேசிட்டேன்ல? படிச்சவனாட்டம் இருக்க.. இத்தாத்தண்டில போனை வெச்சு நோண்டிகிட்டிருக்க.. பேரில்லைன்ற” என்று அவர் சொல்லவும், ‘இங்க குடுங்கய்யா’ என்று அவர் ஃபோனை வாங்கி ரிசீவ்ட் காலைப் பார்க்க ‘Gannama” என்று இருந்தது.

“ஐயா.. கண்ணம்மாக்கு கே தாங்க வரும்.. இதுல ஜி போட்டிருக்கு. அதான் தெரியல..” என்றேன்.

“அந்தக் கெரகெமெல்லாம் எனக்குத் தெரியுமா.. படிச்சவனுக. உங்களுக்குதான் தெரியணும்.. “ என்றவர் “சரி விடு... என்ர மருமவன்கிட்ட பேசணும்... சுப்புன்னு இருக்கும்பாரு... எடுத்துக் கொடு” என்றார்.

நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.