Thursday 15 March 2012

மதுரை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை, டெஹ்ராடூன்- சென்னை ரயில் மதுரை வரை நீடிப்பு

டெல்லி: மதுரை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல டெஹ்ராடூன்- சென்னை எக்ஸ்பிரஸ் மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட மத்திய ரயில்வே பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் வெளியாயின.

இதன்படி மதுரை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் (ரயில் எண்கள்- 16779/16780) நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல டெஹ்ராடூன்- சென்னை எக்ஸ்பிரஸ் (ரயில் எண்கள்- 12687/12688) மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஈரோடு வழியாக செல்லும்.

மேலும் மும்பையின் தாதர்- பெங்களூரின் யஷ்வந்த்பூர் இடையிலான ரயில் (ரயில் எண்கள்- 11017/11018) 3 நாட்களுக்கு பாண்டிச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, காட்பாடி, விழுப்புரம் வழியாக இயங்கும். இதன்மூலம் பெங்களூர்-பாண்டிச்சேரிக்கு கூடுதல் ரயில் கிடைத்துள்ளது.

இதே ரயில் வாரத்தின் மற்ற 3 நாட்களுக்கு திருநெல்வேலி வரை இயக்கப்படும். இந்த ரயில் தர்மபுரி, ஈரோடு வழியாக இயங்கும்.

திருச்சி- நாகூர் இடையிலான ரயில் (ரயில் எண்கள்- 56714/56711) காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை- ஈரோடு பாஸஞ்சர் ரயில் சேலம் வரையும், வேளாங்கண்ணி- நாகூர் இடையிலான ரயில் காரைக்கால் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை-திருப்பதி வாரம் இருமுறை ரயில் இனி வாரம் 3 முறையும், சென்னை- மங்களூர் எக்ஸ்பிரஸ் வாரம் 6 நாட்களுக்குப் பதில் 7 நாட்களும், கன்னியாகுமரி-நிஸாமுதீன் எக்ஸ்பிரஸ் வாரம் ஒரு முறைக்குப் பதிலாக வாரம் 2 முறையும், காரக்பூர்- விழுப்புரம் ரயில் வாரம் ஒரு முறைக்குப் பதிலாக வாரம் 2 முறையும் இயக்கப்படும்.

6
தமிழக திட்டங்களுக்கு சர்வே எடுக்குறாங்களாம்..:

அதே போல இந்த ஆண்டில் 114 புதிய ரயில் பாதைகள் அமைப்பது குறித்து சர்வே நடத்தவுள்ளார்களாம். அதில், சென்னை-ஸ்ரீபெரும்புதூர் (கிண்டி, பூந்தமல்லி வழியாக), காஞ்சிபுரம்-திருவண்ணாமலை- காட்பாடி, கும்பகோணம்-ஆண்டிமடம்- ஜெயங்கொண்டான்- விருத்தாசலம், தஞ்சாவூர்- புதுக்கோட்டை (வழி-கந்தர்வகோட்டை), அத்திப்பட்டு-எண்ணூர் துறைமுகம், திண்டுக்கல்-போடிநாயக்கனூர்- குமுளி ஆகிய திட்டங்களும் அடங்கும்.

அகலப் பாதை திட்டங்கள்:

இந்த ஆண்டில் 19 மீட்டர்கேஜ் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதில், விருதுநகர்- அருப்புக்கோட்டை, மயிலாடுதுறை- திருவாரூர், பழனி-பொள்ளாச்சி, பொள்ளாச்சி- பாலக்காடு, அருப்புக்கோட்டை- மானாமதுரை, பொள்ளாச்சி- கிணத்துக்கடவு ஆகிய திட்டங்களும் அடங்கும்.

இரட்டை ரயில் பாதைகள்:

நாடு முழுவதும் 55 இரட்டை ரயில் பாதைகள் அமைக்கும் பணி இந்த ஆண்டில் முடிவடையும். அதில், செங்கல்பட்டு-விழுப்புரம், எண்ணூர்- அத்திப்பட்டு ஆகியவையும் அடங்கும். மேலும் மதுரை- நெல்லை- கன்னியாகுமரி இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணிக்கு அனுமதியும் தரப்பட்டுள்ளது.

இந்த மதுரை- நெல்லை- குமரி பாதையோடு, கோவை- மேட்டுப்பாளையும் பாதையும் மின்மயமாக்கப்படும்.

இவ்வாறு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.