Monday 19 March 2012

தீபம்


தீபம் ஏற்றும் முறை பொறுமையாக படித்து புரிந்து கொள்ளவும் நண்பர்களே ஆன்மீக விருப்பம் இல்லாத நபர்கள் குறையேதும் கூறாமல் இருக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன் . வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன. விளக்கேற்றும் நேரம் சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கேற்றும் பலன் ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும் இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும் மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும் நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும் ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும் விளக்கேற்றும் திசை கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி மேற்கு - கடன், தோஷம் நீங்கும் வடக்கு - திருமணத்தடை அகலும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது. எத்தனை விளக்கு ஏற்றுவது திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம் சிவாம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் இறைவன். ஆனால், நம் மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு அருள்புரியும் நாளே திருக்கார்த்திகை. சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டபோது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின. ஆறுதீப்பொறிகளும் சரவணப்பொய்கையில் சிறுகுழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல,பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறுஅகல்களில் குட்டிக்குழந்தையாக முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறுதீபங்களை வாசலில் வைக்க வேண்டும். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல்தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே. திருவிளக்கின் சிறப்பு திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். அண்ணாமலையார், அபிதகுஜாம்பிகை, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மட்டுமல்ல, திருக்கார்த்திகையன்று திருவிளக்கு ஏற்றி பூஜை செய்யும் போதும் 108 போற்றி சொல்லி வழிபடுகிறோம். இதை 120, 130, 150, 1000 என்றும் வைத்திருக்கலாமே! ஏன் 108க்கு முக்கியத்துவம் தரப்பட்டது தெரியுமா? மனிதன் ஒரு மணிநேரத்துக்கு 900 தடவை வீதம் 24 மணி நேரத்துக்கு 21,600 தடவை மூச்சு விடுகிறான். இதில் பகலில் 10,800 தடவையும், இரவில் 10,800 தடவையும் மூச்சு விடப்படுகிறது. ஒவ்வொரு தடவை மூச்சு விடும் போதும் இறைவனை நினைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இது சாத்தியமா என்றால் இல்லை. "மாயை' (உலக வாழ்க்கை நிரந்தரமானது என்ற எண்ணம்) என்ற வலையில் சிக்கியுள்ள மனிதன் இறைவனை நினைப்பதில்லை, நினைத்தாலும் அதற்கு ஒதுக்கப்படும் நேரம் குறைவு. மாயைக்குரிய எண் 8. இந்த மாயையில் இருந்து நம்மை மீட்பவன் இறைவன். நாம் பல வடிவங்களில் வழிபட்டாலும், அவன் ஒரே ஒருவன் தான். ஆக, ஏக இறைவனுக்கும் (ஒன்றுக்கும்) எட்டுக்கும் ( மாயைக்கும்) மத்தியில் நாம் ஒரு சக்தியுமே இல்லாத பூஜ்யமாக இருக்கிறோம். அதனால் தான் 108 என்ற எண் முக்கியத்துவம் பெற்றது. கலியுகத்தில் இறைவனை அடைய 108 போற்றி நிரம்பவே கைகொடுக்கிறது. திருவிளக்கில் கணபதி... கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும். வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும். முன்பிறவி பாவம் நீக்கும் தீபம் தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ""தீபமங்களஜோதீ நமோநம'' என்று திருப்புகழில் அருணகிரியார் பாடுகிறார். முருகப்பெருமானை அவர் தீபமாக வர்ணிக்கிறார். வேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும். அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோயில் முன்னர் சொக்கப்பனை கொளுத்துவர். எண்ணெயின் பலன் தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும் நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும் இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி விளக்கெண்ணெய்- புகழ் தரும் ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள் திருவிளக்கில் எத்தனை பொட்டு வைக்க வேண்டும் திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். பொட்டு வைக்கும் போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன. எந்த தெய்வத்துக்கு என்ன எண்ணெய்? விநாயகர் - தேங்காய் எண்ணெய் மகாலட்சுமி - பசுநெய் குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய் பைரவர் - நல்லெண்ணெய் அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய் பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் - நல்லெண்ணெய் விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன் ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம். திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல். வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி. சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல். இவ்வாறு நமது முன்னோர்கள் வகுத்து வைத்து உள்ளார்கள் நமக்கு பயன்படும் படியாக இதில் அறிவியல் பூர்வமான விசியங்களும் இருக்கலாம் எனபது உண்மை எதோ ஒரு காரணத்துக்காக இவ்வாறு வழிமுறைகளை வகுத்து வைக்க மாட்டார்கள் அவர்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் .