Friday 11 May 2012

தங்கம் போல் துன்பப்படுவோம்

தங்கம் போல் துன்பப்படுவோம்

* காட்டில் இருக்கும் சிறிய விறகிற்கு தீ வைத்தால், விறகு மட்டும் எரிவதோடு நின்று விடாது. காட்டையே அழித்துவிட்டுத்தான் அணையும். அதுபோலவே, மனிதர்களின் மனதில் உண்டாகும் தீய எண்ணம் என்னும் தீயானது அவர்களை மட்டுமின்றி, அவர்களை சுற்றியுள்ளவர்களையும் அழித்துவிடும். ஆகவே, எண்ணங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

* எந்த வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். அவை உங்களுக்கு விருப்பம் இல்லாத வேலை என்றாலும், உங்களை நம்பி கொடுக்கப்பட்டிருப்பதால் அதனை எத்தகைய சிரத்தை எடுத்தாவது சிறப்பாக முடிக்க வேண்டும். அவ்வாறில்லாமல், பெயருக்கு இயந்திரம் போல செய்யக்கூடாது. இது, எண்ணெய் இல்லாத விளக்கில், பிரகாசிக்காமல் எரியும் திரிக்கு ஒப்பானதாகும். மனதில் 'ஈடுபாடு' என்ற எண்ணெய்யை விட்டு பணி செய்தால்தான், முடிவும் சுடர்போல பிரகாசமாக இருக்கும்.

* உலோகங்களில் எல்லாம் உயர்ந்த தங்கத்தை, தீயில் போட்டு உருக்குகின்றனர். இதனை, தங்கத்தை வெறுப்பதற்காக தீயில் போடப்பட்டதாக சொல்லமுடியாது. அதை தீயில் இட்டால், அழுக்குகள் தானாக நீங்கிவிடும். அதைப்போலவே, மனிதர்கள் தங்களிடமுள்ள மன அழுக்குகளை நீக்கி, பரிசுத்தமானவர்களாக திகழவே கடவுள் துன்பங்களைக் கொடுக்கிறார். இதனைப் புரிந்து கொண்டு துன்பத்தை இன்பமாக ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இத்தகையவர்கள், கடவுளுக்கு ஒப்பானவர்கள் ஆவர்.