Wednesday 1 May 2013

ஒப்பந்த திருமணத்தின் பெயரில் ஷேக்குகள் விபச்சாரம்!

இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், சுற்றுலா வரும் இசுலாமிய செல்வச் சீமான்கள், குறைந்த நாட்கள் இங்கு தங்கினாலும், பாலியல் உறவுக்காக குறுகிய கால ஒப்பந்த திருமணங்கள் செய்து கொள்கின்றனர்.

ஒரு மாதத் திருமணம்பாலியல் சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு வரும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த பணக்கார முஸ்லீம் ஆண்கள், மாதக் கணக்கில் ஒப்பந்த மனைவிகளை மணந்து கொண்டு, ஒப்பந்த காலம் முடிந்தவுடன் தலாக் செய்கின்றனர். இதன் மூலமாக அவர்களின் பாலியல் வக்கிரத்தை தீர்த்துக்கொள்வதோடு, மதத்தின் புனிதத்தையும் காத்துக்கொள்கின்றனர் ( விபச்சாரத்தில் ஈடுபடுவது மார்க்கத்திற்கு எதிரானதாம்).

இத்தகைய ஒப்பந்தத் திருமணங்கள் தென் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் அதிகரித்து வருகின்றன என்று இஸ்லாமிய பெண்கள் உரிமைக்காக பாடுபடும் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

பணம் கொழுத்த வெளிநாட்டவர்கள், உள்ளூர் ஏஜென்ட் மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ‘ குவாஸி ’ என்று அழைக்கப்படும் இஸ்லாமிய மதகுருவின் துணையோடு ஏழ்மையில் உழலும் முஸ்லீம் குடும்பங்களின் மீதும் அவர்கள் வீட்டு இளம்பெண்களின் மீதும் இந்த அநியாயத்தை திணிக்கின்றனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த17 வயது இஸ்லாமிய இளம்பெண் நௌஷீன் தபசூம் தனக்கு நடந்த இத்தகைய ஒப்பந்தத் திருமணத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

உறவுக்கார பெண் ஒருவரால் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நௌஷீன், அங்கு ஏற்கனவே இருந்த 3 பதின்ம வயது பெண்களுடன் சேர்த்து சூடான் எண்ணெய் கம்பெனி மேல் அதிகாரி ஒருவரிடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

மணமகன் உசாமா இப்ராகிம் முஹம்மதுக்கு வயது 44, திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் சூடான் தலைநகர் கார்டூமில் வாழ்ந்து வருபவர். ஹோட்டலில் பார்த்த நான்கு பெண்களில் நௌஷீனை தேர்வு செய்தவர், பெண்ணின் வீ ட்டிற்கு முறைப்படி வந்து, குவாஸி முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். நான்கு வாரத்துக்கு ஒப்பந்த மனைவியாக இருப்பதற்காக £1200 – இந்திய மதிப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் – அவரது பெற்றோருக்கு வழங்கப்பட்டது.

திருமணமான மறுநாள் நௌஷீன் வீட்டிற்கு வந்த உசாமா தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி அவளை கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு நௌஷீன் ஒத்துழைக்கவில்லை.

பணம் தந்து ஏமாந்த உசாமாவிற்கு, மகளை எப்படியும் சமாதானப்படுத்தி அவருடன் உல்லாசமாக இருக்க வைப்பதாக வாக்குறுதி அளித்து அனுப்பிவைத்த நௌஷீனின் பெற்றோர், அவளை அடித்து புடைத்துள்ளனர். ‘புது மாப்பிள்ளைக்கு இணங்கவில்லை என்றால் தண்டனை’ உறுதி என்று எச்சரித்தனர்.

பெற்றோரின் கட்டாயத்திற்கு அடிபணியாத நௌஷீன், தன்னை காத்துக் கொள்ளும் பொருட்டு ஹைதராபாத் மோகல்புரி பகுதியில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து வெளியேறி ரோந்து போலீஸாரிடம் சரணடைந்திருக்கிறார். நடந்த கொடுமையை தைரியமாக விளக்கிய நௌஷீன், போலீஸாரிடம் குற்றத்தையும் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், சூடான் நாட்டைச் சேர்ந்த ஒரு மாத மாப்பிள்ளை உசாமா, நௌஷீனின் உறவுக்கார பெண், திருமணத்தை நடத்திய குவாஸி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நௌஷீனின் பெற்றோர்கள் தலைமறைவாகி விட்ட காரணத்தால் அவர்களை கைது செய்ய பிடியாணையுடன் போலீஸார் காத்துக் கொண்டு இருக்கின்றனர். 18 வயது கூட அடையாத மைனர் பெண்ணை திருமணம் முடித்ததற்காகவும், பெண்மையை மானபங்கம் செய்யும் விதத்தில் கிரிமினல் சதியில் பங்கெடுத்ததாகவும் நௌஷீன் பெற்றோர்கள் மீது குற்றப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உசாமா சல்லாபத்திற்காக வழங்கிய1 லட்சம் ரூபாய் பணம், நௌஷீனின் உறவுக்கார பெண் மும்தாஜ் பேகத்திற்கு20,000 ரூபாயும், பெற்றோருக்கு70,000 ரூபாயும், குவாஸி மற்றும் உருது மொழி பெயர்ப்பாளருக்கு தலா5000 ரூபாய் விகிதத்தில் பங்கிட்டு பைசல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கூறுகிறார் .

மேலும் திருமணச் சான்றிதழில் ‘ மணமகனின் சுற்றுலா பயணம் முடிவில் இருவருக்கும் விவாகரத்து வழங்கும் ஒப்புதலுடன் கூடிய நிபந்தனைகள் தலாக்னாமா என்ற பிரிவின் கீழ் தெளிவாக இடம் பெற்றுள்ளன’ என்றும் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விவரித்தார்.

நௌஷீன் தந்தையைவிட வயதில் மூத்த உசாமா, சூடானில் பாலியல் உல்லாசத்தில் களிக்கவேண்டும் என்றால் இங்கு செலவு செய்ததைவிட3 மடங்கு அதிகமாக செலவழிக்கவேண்டும். விபச்சாரம் தடை செய்யப்பட்ட சூடானில் குறைவானே பெண்களே இதில் ஈடுபடுகின்றன. ஆகவே பாலியல் இன்பம் தேவையெனில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், சுற்றுலா வரும் இசுலாமிய செல்வச் சீமான்கள், குறைந்த நாட்கள் இங்கு தங்கினாலும், பாலியல் உறவுக்காக இத்தகைய காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

அதிகமான பெண் குழந்தைகள் உள்ள ஏழ்மையான குடும்பத்தில் அவர்களை பராமரிப்பை தாண்டி எல்லாருக்கும் திருமணம் முடிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். ஆகவே ஒன்றுக்கும் அதிகமான இந்த ஒப்பந்த திருமணங்கள் மூலமாக பணம் ஈட்டி எதிர்காலத்தில் திருமணம் நடத்த சேமிக்கிறார்கள், ஏழை இசுலாமிய பெற்றோர்கள்.

ஹைதராபாத் பெண்கள் மற்றும் குழந்தை நல வாழ்வு சமூக அமைப்பை சேர்ந்த ஷிராஸ் அமீனா கான் என்ற பெண், ‘ நகரத்தில் ஒரு மாதத்திற்கு15 ஒப்பந்த திருமணங்கள் நடப்பதாகவும் அவை அதிகரித்துக் கொண்டே போவதாகவும்’ கூறியுள்ளார்.

நகரத்தில் சட்டத்திற்கு புறம்பான பல திருமணங்கள் நடக்கின்றன என்று ஒப்புக்கொள்ளும் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், இப்போது கைது ஆகி இருக்கும் உசாமா, ‘ கார்டூமில் நண்பர் ஒருவர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த போது 40 நாள் மனைவியை ஒப்பந்த முறையில் மணமுடித்து வைத்து இருந்ததாக கேட்டு, அதை தானும் அனுபவிக்கும் நோக்கத்துடன் இந்தியா வந்ததாக’ அளித்த வாக்குமூலத்தை குறிப்பிடுகிறார்.

பெற்றோர்கள் வீட்டிலிருந்து தப்பித்த நௌஷீன் இப்போது அரசாங்க பெண்கள் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘தனக்கு நடந்ததைப் போல பிற பெண்களுக்கு இனிமேல் நடக்கக் கூடாது’ என்பதற்காக தன் குடும்பத்தினரை எதிர்த்து போலீஸில் புகார் தந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

“அறியாமையில் நடப்பது என்னவென்று தெரியாமல் இந்த திருமணத்திற்கு நான் ஒப்புக்கொண்டேன். அவர்கள் என்னை கட்டாயப்படுத்தினார்கள். என் உண்மையான வயதை மறைத்து பொய் சான்றிதழ் தயாரித்து என்னை24 வயது பெண்ணாக காண்பித்தனர். பெண்களை தங்கள் இன்பத்திற்காகவும், சுய நலத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள், அதனை அம்பலப்படுத்தவே நான் போலீஸிடம் சென்றேன்.”

“என் பெற்றோரை எதிர்க்க எனக்கு துணிச்சல் தேவைப்பட்டது. எனக்கு வீட்டுக்குப் போக பயமாக இருப்பதால் மறுபடியும் அங்கு செல்ல விருப்பமில்லை” என்று தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பிறர் நலத்திற்காக பகிரங்கமாக்கியிருக்கிறார் நௌஷென் தபசும்.

நடக்கும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த திருமணங்களில் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலி ஆவணங்கள் மூலமாக பணம் கொடுத்து ஒரு பெண்ணை விலைக்கு வாங்கி ஒரு பண்டத்தைப் போல நுகர நினைக்கும் அட்டுழியத்தை நினைப்பதற்கே ஆபாசமாக உள்ளது.

மேற்கத்திய சீமான்கள் காம வக்கிரங்களை தீர்த்துக்கொள்ள, பாலியல் கேளிக்கை அடங்கிய சுற்றுலாவாக, இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஹைதரபாத்திற்கு மட்டும் அரபுலக சீமான்கள் வருகின்றனர். இந்தியாவின் ஏழை முஸ்லீம் சிறுமிகளை கிழட்டு முஸ்லீம் ஷேக்குகளுக்கு திருமணம் முடிப்பதின் இன்னொரு வடிவம்தான் இப்போது நடக்கும் இந்த ஒப்பந்த திருமணங்கள்.

இத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கமோ, பிற்போக்கு வாத இஸ்லாமிய மதவாதிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம். ஏனெனில் இருவருக்கும் அரபு ஷேக்குகளின் பணம் தேவை!