Saturday 15 June 2013

தமிழனுக்கு முதல் எதிரி இந்தியச் சட்டங்கள்.

தமிழனுக்கு முதல் எதிரி இந்தியச் சட்டங்கள்.

கடந்த ஐம்பது வருடமாக இந்தியா தமிழருக்கு செய்திருக்கும் துரோகங்களில் பெரிய துரோகம் சட்டரீதியாக தமிழர்களின் மற்றும் அனைத்தும் தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் சட்டங்களை இயற்றுவது.

சுதந்திரம் அடைந்தவுடன் ஹிந்தி மொழிக்கு மட்டும் தனி முக்கியத்துவம் கொடுத்து அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் முதல், தற்போது பாராளுமன்றத்தில் வரப் போகிற நிலச் சட்டம் வரை அனைத்தும் நமது உரிமைகளை பறிப்பதற்காகவே உருவாக்கப்படுகிறது. நம்மை அடிமை ஆக்கும் நோக்கத்திலேயே விவாதிக்கப்படுகிறது.

ஒரு சின்ன உதாரணம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம். தூத்துக்குடி மக்களுக்கு பசுமைத் தீர்ப்பாயம் என்ற ஒரு அமைப்பு இருப்பதே இப்போது தான் தெரியும். ஆனால் அவர்கள் உயிரை குடிக்கும் வகையில் இந்த தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க , மாநில அரசின் மாசுக்கட்டுப்பாடு அமைப்பை மீறி கட்டளை இடுகிறது.

எட்டுக் கோடி மக்களால் தேர்ந்தேர்டுக்கப்பட்ட மாநில அரசின் முடிவை மீறும் முடிவு மூன்று , நான்கு பேர் கொண்ட குழுவுக்கு எப்படி வந்தது?. இந்த ஆலையை தொடர்ந்து கண்காணிக்கும் மாநில மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் கொடுக்கும் தகவலை விட, அனுபவத்தை விட, மக்கள் நிலை அறியும் ஆற்றலை விட அதிகமான தகவல்கள் இந்த மூன்று பேரிடம் இருக்கப் போகிறதா?.

அதே போலத் தான் கூடன்குளம் அணுமின் நிலையம் விவகாரமும். அணு சக்தி விவகாரத்தில் மாநில அரசுக்கு மட்டுமல்ல நீதிமன்றங்களுக்கே துளிக் கூட அதிகாரம் இல்லாத வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இது ஒரு விவகாரம் மட்டும் இல்லை. கல்வி , நிலம், நீர் , வரி , காவல் என மாநில அரசின் அனைத்து விவகாரங்களையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் சட்டங்களை இயற்றி வருகிறது.

இதில் பல சட்டங்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானவை மட்டுமின்றி, எந்த விதமான விவாதமும் மக்கள் மத்தியில் நடக்காமல், மக்களுக்கே சொல்லாமல் உருவாக்கப்படுபவை.

இனியாவது நாம் விழித்துக் கொண்டு மத்திய அரசு போடும் தமிழ் விரோத சட்டங்களை கண்காணிப்போம். தமிழர் சட்ட அறிஞர்கள் மத்திய அரசு போடும் சட்டங்களை கண்காணித்து மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும்.

இந்த நிலை மாறும் வரை இந்தியப் பாராளுமன்றம் என்ற அமைப்பு ஐந்து வருடத்தில் எந்த சட்டமும் போடாமல் நமது ஓட்டுக்களை வைத்து தடுத்தால் கூட தமிழ் மக்களுக்கு நல்லது தான்.

# வரு முன் காப்போம். இந்தியாவின் தமிழர் விரோத சட்ட அமைப்பை தூக்கி எறிவோம்.