Saturday 29 June 2013

தமிழர் பாதுகாவலர் வீரப்பன்டா... எங்க வீரப்பன்டா....

தமிழர் பாதுகாவலர் வீரப்பன்டா... எங்க வீரப்பன்டா....

இந்தியப் படையோடு மோதிய வீரப்பனின் நாட்டுத்துப்பாக்கி!

1989ம் ஆண்டு, வீரப்பனாரின் வாழ்வில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது.
அப்போது வீரப்பனார் கிட்டத்தட்ட பதினாறு சிற்றூர்களையும் ஒரு மாவட்டம் அளவு வனப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இரு மாநில வனத்துறையினரும் காவல்துறையினரும் வீரப்பன் பகுதிக்குள் நுழைவதும் துப்பாக்கி சண்டை நடப்பதும் பிறகு பின்வாங்கி ஓடிவருவதுமாக இருந்தனர்.

வனத்துறை ஆர்.டி.ஓ. மோகன்ராஜ் , ஏ.எஸ்.பி சைலேந்திரபாபு போன்றோர் பெரும்படையுடன் அடிக்கடி வீரப்பனோடு மோதிக்கொண்டிருந்தார்கள்.
அதன் பிறகு வனத்துறை அதிகாரி பத்ரசாமி என்பவர் தனிப்பட்ட முயற்சியால், பயிற்சிக்காக கோவை வந்திருந்த ஒரு இந்திய படைப்பிரிவு வீரப்பன் ஆதிக்கம் செலுத்தும் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. 140 படைவீரர்கள், அதிநவீன துப்பாக்கிகள், இரவிலும் பார்க்கக்கூடிய முகக்கண்ணாடிகள், வெடிகுண்டுகள், தகவல் தொடர்புக் கருவிகள் என போருக்கு ஆயத்தமான படை போல பல வண்டிகளில் அவர்கள் வந்து இறங்கினர். இவர்களை வரவேற்ற வனத்துறையினர் வீரப்பனைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிவித்தனர்.

பின்னர் வனத்துறை மற்றும் படையினர் இணைந்த பெரிய படை உருவாக்கப்பட்டது; தாக்குதல் வகுப்புகள் நடத்தப்பட்டன; வரை படங்கள் அலசப்பட்டன; யுக்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டன; வியூகங்கள் வகுக்கப்பட்டன.
அவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்த கூடாரங்களுக்கு சற்று தொலைவில் பெரிய மீசையும், தோளில் தேன்குடுவையும் சுமந்துகொண்டு நாட்டுப்புறப்பாடலைப் பாடியபடி ஒரு மலைவாசி வந்துகொண்டிருந்தார்.
அவரைத் தடுத்து நிறுத்திய ஒரு படைக்காவலர் "யார் நீ இங்க எதுக்கு வந்த?" என்று அதட்டினார்.

அந்தக் காவலர் கையில் இருந்த நவீன துப்பாக்கியையே அதிசயமாகப் பார்த்தபடி "சாமி! மலைக்காட்டுத் தேன் கொண்டுவந்திருக்கேன்; கொறஞ்ச வெல தாரன்; வாங்கிக்கிறீயளா?" என்று கேட்டார் மலைவாசி வேடமிட்ட வீரப்பன்.

"அதெல்லாம் வேண்டாம். போ" என்று விரட்டினார் காவலர்.
எதிரிலிருந்த மரத்தடியில் போய் உட்கார்ந்தார் வீரப்பன்.
பின் அப்பகுதி மக்களின் மெய்நாயகனான 'மலையூர் மம்பட்டியான்' பற்றிய நாட்டுப்புறப்பாடலை பாடத்தொடங்கினார்.

அந்த பாட்டைக் கேட்டு மனம் குளிர்ந்த அந்த படைவீரன் சிரித்துக்கொண்டே வீரப்பனாரை நெருங்கி "உனக்கு வீரப்பனைத் தெரியுமா?" என்று கேட்டார்.
"அவன் பயங்கரமான ஆளுங்க. உங்கள மாதிரியே ஆளுகளும் துப்பாக்கியும் நெறய வச்சிருக்கானுங்க" என்றார்.

"அதான் நாங்க வந்துட்டோம்ல கூடிய சீக்கிரம் முடிவு கட்டிடுறோம்" என்றார்.

பின் உள்ளே சென்று அனைவருக்கும் தரப்பட்ட வீரப்பனின் புகைப்படத்தை தானும் வாங்கும்போதுதான் அந்தப் படைவீரனுக்கு வெளியே நிற்பது வீரப்பன் என்று புரிந்தது. ஓடி வந்து வெளியே சுற்றும் முற்றும் பார்த்தார். ஆனால், வீரப்பன் மாயமாக மறைந்துவிட்டிருந்தார்.

காட்டிற்குத் திரும்பிய வீரப்பன் தமது வேடத்தைக் கலைத்தபடி தனது தளபதிகளிடம் "நமக்காவத்தான் வந்திருக்கானுக, கல்குவாரிக்குப்போய் வெடிமருந்து வாங்கி வைங்க. இன்னைக்கு பொழுது சாஞ்சதும் நம்மள தாக்கவருவானுக போலத்தெரியுது" என்று கூறினார்.
மறுநாள் இந்தியப்படை வனத்துறையினருடன் இணைந்து வீரப்பன் பகுதிக்குள் வண்டி வண்டியாக நுழைய வீரப்பனின் ஆட்கள் முதலில் அந்த வண்டிகளை நோக்கி சுட்டு மோதலை ஆரம்பித்தனர்.
இருதரப்பிலும் கடுமையான துப்பாக்கிச் சூடுகள். தொடர்ந்து ஆறுநாட்கள் ஒரு போரே நடந்தது.
ஆனாலும், வெறும் நாட்டுத்துப்பாக்கிகளும், பாறையை உடைக்கும் வெடிமருந்தையும் வைத்தே வீரப்பன் படை அந்த பெரிய படையை எதிர்கொண்டது.
வீரப்பனுக்கு இழப்பு அதிகம் என்றாலும் அந்தப்படையினரால் வீரப்பனின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.

ஆறு நாட்களாக துப்பாக்கித் தோட்டாக்களைத் தீர்த்த இந்தியப்படையினர் கடைசியில் திரும்புவதாக முடிவு செய்தனர்.

அதன்பிறகுதான் வீரப்பனை இராணுவமே வந்தாலும் தோற்கடிக்க முடியாது என்பது அனைவருக்கும் புரிந்தது.