Tuesday 22 October 2013

மீன் சமையலில் கவனிக்க வேண்டியவை

மீன் சமையலில் கவனிக்க வேண்டியவை

மீன் உணவுகள் நமது ஆரோக்கியத்துக்கு உகந்தவை. ஆனால், நமது சமையல் முறைகளால் அந்த ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். நிறைய எண்ணெய் சேர்த்து சமைப்பது, எண்ணெயில் பொரித்தெடுப்பது, மேலும் அளவுக்கு அதிகமாக வேக வைப்பது போன்ற செய்முறைகலால் அதிலுள்ள ஊட்டச் சத்துக்களை நாம் குறைத்துவிடக் கூடாது. முடிந்த வரையில் ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பின்பற்றுவது நல்லது.

மீன் மற்றும் கடலுணவுகள் விரைவில் கெட்டுவிடும் தன்மையுடையவை. அதனால் அதிக நேரம் வெளியில் வைக்கக் கூடாது. சமைத்த உணவு ஆறியதும், ப்ரிட்ஜில் வைத்து தேவையான போது மைக்ரோவேவ் ஓவனில் அல்லது அடுப்பில் சூடாக்கிப் பயன்படுத்தலாம். தேவையான அளவே சூடேற்ற வேண்டும். சூடாக்கிய பொருட்களை மீண்டும் மீண்டும் ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. அதே போல் ஃப்ரீசரில் இருந்து எடுத்து வெளியில் பல மணி நேரங்கள் வைத்த மீனை மீண்டும்ஃப்ரீசரில் வைக்கக் கூடாது.

மீன் வாங்கியவுடன் அதைச் சுத்தம் செய்து மஞ்சள் நீரில் அலசி, நீர் வடிந்ததும் ஒரு நாளைக்கு தேவையான அளவுகளில் பிரித்து பிளாஸ்டிக் பைகளில் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து ஃப்ரீசரில் வைத்துவிட வேண்டும். மஞ்சள் ஒரு கிருமி நாசினி அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டதென்பதால் மாமிசம் எதுவானாலும் மஞ்சள் நீர்ல் நன்கு அலசுவது அவசியம.

மீன் சகைக்கும் போது அகலமான பாத்திரஙக்ளில் சமைத்தால் நொறுங்காமல் அழகாகச் சமைத்து எடுக்கலாம்.

ப்ரிட்ஜில் சமைத்த உணவுகள் வைத்திருக்கும் பகுதியில் சமைக்காத கடல் உணவு அல்லது மாமிசத்தை வைத்தால், அதிலுள்ல பாக்டீரியாக்கள் மற்ற பொருட்களுக்குப் பரவி உணவு கெட்டுப் போகும்.

மீன் வெட்டுவதற்கென தனியாக ஒரு பலகை வைத்திருங்கள். வேலை முடித்தவுடன் பலகை, கத்தி இரண்டையும் நன்றாக கொதி நீரில் கழுவிக் காய வைக்க வேண்டும்.

மீன் கழுவிய இடத்தை, பாத்திரங்களை நன்கு கழுவிய பின்னர், எலுமிச்சம் தோல் அல்லது வினிகர் போட்டு சுத்தம் செய்தால், அந்த வாடை அகன்றுவிடும்.